Thursday, May 30, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 2



சோழாவரம் ரேஸ் கோர்ஸ்.

ரகுநாத் தனது காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டுத் தான் வழக்கமாக அமரும் காலரியை நோக்கி நடந்தான். இவன் வருவதை தூரத்திலிருந்து கண்டுகொண்ட நண்பர்கள் பாலாவும் கதிர்வேலுவும் ரகுவைப் பார்த்து கை அசைத்தனர்.

ரகுநாத், "என்னடா, இன்னிக்கு இவ்வளவு கூட்டம்? எதாவது ஸ்பெஷலா?

பாலா,"பின்னே கிரிக்கெட் டீம் கேப்டன் மொஹிந்தர் சிங் பைக் ஓட்ட வர்றான்னா மக்கள் பார்க்க வரமாட்டாங்களா?"

"நிஜமாவா?" என்று கூறியவாறே ஆச்சர்யத்துடன் ட்ராக்கை நோக்கினான். அங்கே நீள்முடியுடன் மொஹிந்தர் பைக்கில் அமர்ந்தபடி ரேசுக்குத் தயாராகிக் கொண்டிருந்தான். கூடவே யாருக்கோ டாட்டா காட்டிக் கொண்டிருந்தான். ரகு டாட்டா வந்த திசையில் கவனம் செலுத்தினான். அங்கே 2-3 வட இந்திய இளைஞிகளும் சில இளைஞர்களும் இருந்தனர். அவர்களில் ஒருவன் சுழற்பந்து வீரர் ஹர்கிரத்சிங். மற்றொருவன் பயில்வான் போல் இருந்தான். ரகுவால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. கூட வந்த பெண்கள் கல்லூரி மாணவிகள் போல் கொஞ்சமாக உடையணிந்து வந்திருந்தனர்

இது ஒன்றும் முறையான ரேஸ் அல்ல. பைக் ஆர்வலர்கள் ஒன்று கூடி ஜாலிக்காக ஓட்டும் போட்டி. இதிலும் சிலர் விளையாட்டாக சூதாடத் தொடங்கி முடிவில் சீரியசாக சண்டை போடத் தொடங்கி விடுவதும் உண்டு.

ரகு தனக்குப் பிடித்தமான குளிர்பானத்தை எடுத்துக் கொண்டு அமர்ந்தான். ரேஸ் துவங்கியது.

கேப்டன் மொஹிந்தர் எடுத்த எடுப்பிலேயே அனாயாசமாக ஓட்டத் தொடங்கினான். பைக் ஓட்டுவதில் அவன் காட்டிய லாவகமும் நெளிவு சுளிவும் ரகுவை வாய் பிளக்க வைத்தன. ரகுவும் ஒரு காலத்தில் இது போன்ற ரேஸ்களில் பங்கெடுத்தவன் தான். திருமணம் ஆன பிறகு எப்பொழுதாவது ஒட்டினான் . குழந்தைகள் பிறந்த பிறகு ரிஸ்க் எடுக்கக் கூடாது என்பதால் பார்த்து ரசிப்பதோடு சரி .

எதிர்பார்த்தது போல் மொஹிந்தர் வெற்றி பெற்றான். ரகுவுக்கு நீண்ட நாளைக்குப் பிறகு ஒரு நல்ல ரேசைப் பார்த்த திருப்தி கிடைத்தது அதிலும் குறிப்பாக காலையில் வீட்டில் நடந்த நிகழ்வுக்கு இது பெரும் ஆறுதலாக அமைந்தது.

ரகுவும் நண்பர்களும் மொஹிந்தரைப் பாராட்டுவதற்காக அவனை நோக்கிச் சென்றனர். மொஹிந்தர் ரகுவை அடையாளம் கண்டு கொண்டவனாக "நீங்க எப்படி இங்க"

ரகு, "என்னைத் தெரியுமா?"

"பத்மநாபன் சார் மாப்பிளை தானே நீங்க? சார் ரூம்ல உங்க குடும்ப போட்டோ இருக்கு. அதுல உங்களைப் பார்த்திருக்கேன்"

இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டிருக்கும் போது ஹர்கிரத்தும் கூட வந்த பயில்வானும் காரசாரமாக பேசிக் கொண்டிருந்தனர்.

ரகு மொஹிந்தரைப் பார்த்து "எதாவது பிரச்சினையா?"

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நான் ஜெயிப்பேனா மாட்டேனான்னு ரெண்டு பேரும் பெட் கட்டினாங்க. ஹர்கிரத் தோத்துட்டான், ஆனா பணம் குடுக்க மாட்டேங்கறான். அதான் செல்லச் சண்டை,. சாரி, இவங்களை நான் அறிமுகப்படுத்தவே இல்லையே? ஹர்கிரத்தை உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் . இது ராதே சிங். என் நண்பர் மற்றும் பயில்வான்.அப்புறம் இது ராக்கி, என் கேர்ள் ப்ரெண்ட். அது அவங்களோட ப்ரெண்ட் பல்லவி

எல்லோரும் கை குலுக்கிக் கொண்டனர். பிறகு மொஹிந்தர் ரகுவைப் பார்த்து "ரகு, இங்க எதாவது நல்ல சவுத் இந்தியன் ரெஸ்டாரன்ட் இருக்கா? "

ரகு, "ரெஸ்டாரன்ட் எதுக்கு? நாங்க எப்படியும் லஞ்ச் சாப்பிட எங்க கெஸ்ட் ஹவுசுக்கு போகப் போறோம். நீங்க எங்க கெஸ்டா வாங்க"

மொஹிந்தர் அவர்களிடம் சிறிது நேரம் விவாதித்து விட்டு "ஓகே ஜி, உங்க கூடவே வர்றோம்"





**************************************************************************



சவுத் இந்தியா சிமெண்ட்ஸ் அலுவலகம்

முதன்மை நிர்வாகி நடேசன் பாருவின் அறைக்குள் நுழைகிறார்

"எப்படிம்மா இருக்கே?"

"சௌக்கியம் சார், ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு காலையில் சொன்னீங்க. என்ன விஷயம்?"

கம்பெனியைப் பொறுத்தவரை பாருவுக்கு நடேசன் தான் அப்பா. இவரைக் கலந்து பேசாமல் எந்த முடிவையும் எடுக்கமாட்டாள்


பாரு கம்பெனியின் முழுநேர டைரக்டர். பாருவும் பத்மநாபனும் தான் கம்பெனியின் தூண்கள் பத்மநாபனின் நிர்வாகத் திறமையை அறிந்த அவரின் சகோதரர்கள் அனைவரும் தங்கள் பங்குகளை பத்மநாபனின் பேரில் மாற்றிவிட்டு அதற்குப் பதிலாக பணத்தை பெற்று கொண்டுவிட்டனர். பத்மநாபன் அவர்களிடமிருந்து பங்குகளை "பிடுங்கிக் கொண்டார்" என்றும் சிலர் கூறுவதுண்டு. பத்மநாபனுக்கு ஒரு மகனும் உண்டு. ஆனால் அவன் தந்தையிடம் கோபித்துக் கொண்டு பெங்களூருவில் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் - கோபத்துக்கான உண்மையான காரணம் இன்று வரை யாருக்கும் தெரியாது.


"எல்லாம் வழக்கமான விஷயம் தான்.

இந்த தடவையும் லாபம் குறைஞ்சிட்டுது இப்படியே போச்சுன்னா அப்புறம் அப்பா கஷ்டப்பட்டு இந்தக் கம்பெனியை நஷ்டத்திலேர்ந்து தூக்கி நிறுத்தினது எல்லாம் வீணாப் போயிடும்

"ஒண்ணு புரியல சார், சென்னை மற்றும் சவுத் இந்தியன் நகரங்களில் தான் ரியல் எஸ்டேட் வேகமாக வளர்ந்துக்கிட்டிருக்கு. அப்படி இருந்தும் நம்ம ஷேர் உயர மாட்டேங்குது. நாக்பூரைத் தாண்டி நம்மளால மேல போக முடியலையே, ஏன்?

"இங்க ஆரம்பிக்கறவங்க ஏற்கனவே வடக்கேர்ந்து தாம்மா வர்றாங்க. ஆல் இந்தியா ஒப்பந்தத்துல சிமெண்ட் சப்ளை பண்றாங்க. அதனால நம்ம கிட்ட வரமாட்டேங்கறாங்க .

"சரி, இதுக்கு என்ன தான் வழி?"

"கொஞ்சம் பப்ளிசிட்டி பண்ணணும். வடக்கில இருக்கறவங்களுக்கும் நம்ம கம்பெனியைப் பத்தி நல்லாத் தெரிய வைக்கணும்"

"எப்படி?"

பத்திரிகை விளம்பரம் வேஸ்ட் . அதை ஏற்கனவே பண்ணிப் பார்த்துட்டோம். எதாச்சும் நேஷனல் ப்ரொக்ராமுக்கு ஸ்பான்சர் பண்ணினா முன்னேற்றம் தெரியலாம்"

"புரியலையே?"

"உதாரணத்திற்கு, கிரிக்கெட் போட்டி ஸ்பான்சர் பண்ணலாம். அப்பாவுக்கும் கிரிக்கெட்டுக்கும் தான் நல்ல தொடர்பு இருக்கே. அதை காபிடலைஸ் பண்ணணும். இல்லேன்னா இவ்ளோ சிமெண்ட் உற்பத்தித் திறன் அதிகப்படுத்தியும் லாபம் ஒழுங்கா வரலேன்னா அப்புறம் நம்மளால தொழில்ல நிற்க முடியாது"

""சரி சார், நான் அப்பா கிட்ட பேசிட்டு முடிவு சொல்றேன்"

பணக்காரர்களுக்கே உண்டான பிரதான பிரச்சினை - சம்பாதித்த பணத்தைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி?. அதற்கு பத்மநாபன் குடும்பமும் விதிவிலக்கல்ல.


ஆட்டம் தொடரும்...


Jayaraman
New Delhi

(If you cant visit our blog, subscribe yourself with your email id. The article will be sent to you thru automated email)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...