Friday, March 6, 2015

தமிழில் கிரிக்கெட்


உலகக் கோப்பையை  தமிழ் வர்ணனையுடன் பார்ப்பது வித்யாசமான அனுபவமாக இருந்தாலும் சுவாரஸ்யம் குறைவாக உள்ளது போல் தோன்றுகிறது. ஒருவேளை காலம் காலமாக ஆங்கிலத்திலேயே கேட்டுப் பழகியதும் சிறந்த வர்ணனையாளர்கள் இல்லாததும் காரணமாக இருக்கலாம். அதனால் தமிழ் வர்ணனையை சுவாரஸ்யமாக்க நாம் சில பிரபலங்களை அழைத்தோம்.

ஹிந்தி வர்ணனைக்கு அமிதாப் பச்சன் வந்தது போல் ஏன் தமிழ் பிரபலங்கள் வரக்கூடாது?

பார்த்திபன்:

பொதுவா இந்திய அணியில் பந்து வீச, அதாவது பால் போட சரியான ஆள் இல்லைன்னு சொல்றாங்க. அது ஒரு வகையில் சரி தான். ஏன்னா எங்க வீட்டு பால்காரர் கூட ஒழுங்கா பால் போடறதில்லை. நடுவுல ஒரு நாள் டிமிக்கி குடுத்துடறார். ஆனா பாருங்க, அமலா பால்.... சரி மேட்ச்சுக்கு வருவோம். அடுத்ததா அஷ்வின் பந்து வீச வர்றாரு, பேட்ஸ்மேன் எந்தப் பக்கம் அடிக்கப் போறார்னு கவனிச்சு பந்து வீச வேண்டியது தான். அதுக்காக இவ்ளோ நிதானமாவா பந்து வீசறது? ஆட்டக்காரர் மிஸ்பா பொறுமை இழக்கறது நல்லாத் தெரியுது. இவ்ளோ நேரம் நந்தனம் பஸ் ஸ்டாப்ல நின்னிருந்தா இதுக்குள்ள இரண்டு 23c பஸ் போயிருக்கும்னு பீல் பண்றார் போல. அஷ்வின் ஒரு வழியா பந்து வீசிட்டாரு. ஆனா அது அவர் எதிர்பார்த்த படி போகாம நம்ம பொண்டாட்டிங்க மாதிரி அது இஷ்டத்துக்கு இடப்பக்கமா போகவும், "தலை" தோனி அதை நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி நிலத்தில் கால் படாம டைவ் அடிச்சு புடிச்சிட்டாரு. பொதுவா எல்லாரும் தோனிக்கு ஏன் தலையில் முடி அவ்வளவா இல்லைன்னு கேட்கறாங்க. அவர் தான் கிரிக்கெட்ல "முடி சூடா" மன்னன் ஆச்சே!! அதான்.

"வெண்ணிற ஆடை" மூர்த்தி:

ஆஆ..என்ன இவன் இவ்ளோ பெரிசா வெச்சிருக்கான்? "அதுக்கு" உறை வேற போட்டிருக்கான்? "அது" கையில் படக்கூடாதுங்கறதுக்காக கைக்கு வேற உறை போட்டிருக்கான். (அருகில் இருப்பவர் ஏதோ கேட்கவும்), மூதேவி, நான் விராட் கோலி பேட்டைச் சொன்னேன். நீ பாட்டுக்கு எதையாச்சும் எசகு பிசகா நினைக்காதே. விராட் கோலி மூஞ்சி இன்னிக்கு ரொம்பவே பிரகாசமா இருக்கு. ஒரு வேளை நல்லாப் "பண்ணிட்டு" வந்திருப்பார் போல. (மீண்டும் அருகில் இருப்பவர் ஏதோ கேட்கவும்) "புர்ர்ர்ர்.நான் ப்ராக்டிஸ் பண்ணிட்டு வந்திருப்பார்னு சொன்னேன். வர வர திறக்கவே விட மாட்டேங்கறாங்களே ("தமிழ்ப்படம்" ஸ்டைலில் காகம் அவர் தலையில் கொட்டுகிறது) "நான் வாயைச் சொன்னேன்". ஆமாம், யார் அவன், இவ்ளோ உயரமா இருக்கான்,  
கழுத்துக்குக் கீழ வெறும் கால் தான் இருக்கும் போல.

கவுண்டமணி:

அடடாடா, இவனுங்க தொல்லை தாங்க முடியலடா. செத்துப்போனவனுக்கு வருஷாவருஷம் திதி குடுக்கறா மாதிரி நாலு வருஷத்துக்கு ஒரு தடவை கப்புக்காக சண்டை போட்டுக்கறாங்க. இப்போ, தேங்கா மண்டையன் பந்து வீசப் போறான். அதை மாங்கா மண்டையன் அடிக்கப் போறான். இந்தப் பக்கம் 4 இத்துப் போனவனுங்க நிக்கறாங்க. அந்தப் பக்கம் 4 செத்துப் போனவங்க நிக்கறாங்க. மாங்கா மண்டையனுக்குப் பின்னாடி நிக்கறவன் ஊர்ல கோழி பிடிக்கறவன் போலிருக்கு. இங்கேயும் கையை அதே மாதிரி வெச்சிக்கிட்டு நிக்கறான். "ஐயோ அம்மா" - தேங்கா மண்டையன் வீசின பந்து மாங்கா மண்டையனுக்கு படாத இடத்தில் பட்டு ஆள் அனேகமா ஸ்பாட் அவுட்ன்னு நினைக்கறேன். க்ரௌண்ட்ல சிவப்பு சட்டை போட்ட ஒரு வெள்ளை பன்னி ஆம்புலன்சை வரச் சொல்றான். அடேய், முதல்ல சொந்தக்காரங்களுக்கு சொல்லியனுப்புங்கடா. அப்புறம் பாடியை இந்த மாதிரி ரொம்ப நேரம் வெளிய வைக்காதீங்க. ஏற்கனவே பேட் ஸ்மெல் வருது. அங்கங்க பன்றிக் காய்ச்சல் வேற பரவுது. செத்தவன் பார்க்கறதுக்கு ஆப்பிரிக்கா பன்னி மாதிரியே இருக்கான். சீக்கிரம் டெட்டால் ஊத்திக் கழுவிட்டு அடுத்த பால் போடுங்கடா.

"நீயா நானா" கோபிநாத்:

இன்னிக்கு நாம் பார்க்கப் போகிற தலைப்பு "இந்தியாவா பாகிஸ்தானா?". இந்த ஷோவில் கலந்துக்க இரண்டு சிறப்பு விருந்தினர்கள் வந்திருக்காங்க. பொதுவா, வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்னு சொல்ற மாதிரி மட்டன் அதிகமா சாப்பிடறவங்க தான் பந்து நல்லா வீச முடியும்னு ஒரு ஐதீகம் இருக்கு. ஆனா அதை பொய்ன்னு நிருபிக்கும் விதத்தில் இருக்கு பாகிஸ்தானின் போலிங். தொடர்ந்து இந்தியா கிட்ட உலகக் கோப்பையில் பாகிஸ்தான் தோத்துக்கிட்டே வருவதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் அரசியலையும் அதைச் சார்ந்த பொருளாதாரத்தையும், மிக வேகமாக மாறி வரும் நமது சமுதாயம் மற்றும் இளைய தலைமுறையின் மீது அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் பற்றித் தான் இன்றைய நிகழ்ச்சியில் நாம் பார்க்கப் போறோம்.(அதற்குள் விஜய் டிவி இயக்குனர் ஓடி வருகிறார்), "யோவ், காசு மிச்சப்படுத்தணும்னு உன்னைப் போய் வர்ணனைக்குப் போட்டேன் பாரு, என்னைச் சொல்லணும்யா. ஏற்கனவே விளம்பர ஸ்பாட்ஸ் முழுசா விக்க முடியாம திண்டாடிக்கிட்டிருக்கேன், நீ வேற. "நீயா நானா" செட் அடுத்த ப்ளோர்ல போட்டிருக்கு, கிளம்பு.

வேளுக்குடி கிருஷ்ணன் (ஆன்மீக சொற்பொழிவாளர்):

அதர்மம் தலை தூக்கும்போதெல்லாம் நான் அவதரிக்கிறேன்னு கண்ணன் கீதையில் சொன்னாற்போல் மளமளவென 4 விக்கெட் சரிந்த நிலையில் தள்ளாடிக்கொண்டிருந்த இந்திய அணியை தூக்கி நிறுத்திய தோனி இன்று கண்ணனாக காட்சி தருகிறார். தோனி கண்ணனெனில் அவன் சொற்படி நடந்த ராயினா தான் இன்றைய ஆட்டத்தில் அர்ஜுனன். நான் ஜீவாத்மா மட்டுமே, பரமாத்மா என்றுமே தோனி தான் என விராட் கோலிக்கு இன்று நன்றாகப் புரிந்திருக்கும்.

பாரதிராஜா:

ஏம்பா யாருப்பா அது? நெடிசலா திருநெல்வேலிக்காரன் மாதிரியே இருக்கான்? I say வாட் இஸ் ஹிஸ் நேம்? என்ன, உமேஷ் யாதவா? அந்தப் பய தான் பந்து போடப் போறான். ச்சே ச்சே, வாட் இஸ் ஹி டூயிங்? இவ்ளோ மோசமாவா போடறது? கொஞ்சம் இருங்க வர்றேன் (என்று கூறி விட்டு மைதானத்துக்குள் புகுந்து நேரே உமேஷிடம் செல்கிறார்). "ஸீ, இன்னும் 4 பால் தான் இருக்கு, 9 ரன் தான் வேணும் அவங்களுக்கு. நீ தான் போடப் போறே, வெளிய ஆடியன்ஸ் அடுத்து என்ன நடக்கப் போகுதோன்னு நெயில் பைட்டிங்க்ல இருக்கான். இப்போ போய் இப்படி பந்து வீசினா எப்படி? ஐ வான்ட் மோர் எமோசன். இன்னொரு டேக் போவோம். போய் பந்து போடு. (உமேஷின் அடுத்த பந்தும் பவுண்டரிக்குச் செல்கிறது, உமேஷை ஓங்கி அறைகிறார்) "உன்னையெல்லாம் எவன்யா டீம்ல எடுத்தது? ஊர்லேந்து வந்துட்டா சூப்பர் ஸ்டார் ஆயிடலாம்னு நினைப்பா? நான் சென்ஸ். கொண்டா பந்தை, "நான் போட்டுக் காட்டறேன் பாரு" என்று கூறி அடுத்த பந்தை அவர் வீச பேட்ஸ்மேன் கிளீன் போல்ட். பாரதிராஜா பெருமையாக "ஸீ, புரிஞ்சுதா? இதான் லாஸ்ட் சான்ஸ். மிஸ் ஆச்சுன்னா ஜஸ்ட் கெட் லாஸ்ட் ஐ ஸே".

(மறைந்த) எழுத்தாளர் சுஜாதா:

விராட்டின் புதிய சிகை அலங்காரம் கவுண்டமணியின் பழைய "கீரிப்பிள்ளை" வசனத்தை நினைவூட்டுகிறது. இலைகள் காய்ந்து தானாகத் தீப்பிடிக்கும் "தந்தூரி" பெர்த்தில் கிரிக்கெட் அவசியம் தானா என்பதை ICC மறு பரிசீலித்தால் நல்லது. வெப்பமயமாக்கலின் வீரியம் இப்படியே தொடர்ந்தால் 2030ல் மைலாப்பூர் மொட்டை மாடியில் படுத்துக் கொண்டே ஓசோனின் ஓட்டையை பார்த்து விட முடியும். பிரபல கிரிக்கெட் வீரர்கள் ஏன் நடுவர்களாக பணியாற்றத் தயங்குகின்றனர்? ஒரு வேளை மைக் பிடித்து "fruit machine "துணையுடன் ஆராய்வதில் அதிக சில்லறை போலும். அல்லது நடுவர் பணியில் உள்ள சிக்கல்களா? போலர் கால் கிரீசில் படுவதை கவனிக்க வேண்டும், பந்து வீச்சின் உயர அகலங்களை கணிக்க வேண்டும், பேட்ஸ்மேன் ஸ்ட்ரைட் டிரைவை கொஞ்சம் தூக்கி அடித்தால் டக்கென குனிய அல்லது இடவலமாக நகர வேண்டும், எல்லாவற்றுக்கும் மேல் மூன்றாவது நாட்டாமை தீர்ப்பை மாற்றினால் கைகளை குறுக்கே கட்டி வெட்கமில்லாமல் மன்னிப்பு கேட்க வேண்டும். புதிய இன்ப்ரா தொழிற்நுட்பத்தில் ஸ்டம்ப் குச்சிகள் உருவாக்கப் பட்டிருக்கின்றன.லேசான உராய்விலேயே ஒளிர்ந்து தீர்ப்பை சொல்லிவிடுகிறது. இதே போல் கிரிக்கெட் சூதாட்டத்திற்கும் எதாவது நேனோ டிவைஸ் கண்டுபிடித்தால் தேவலை. ஆழ்வார் பாசுரங்கள் தொகுப்பை ஸ்பீட் போஸ்டில் பரிசாக அனுப்பலாம்" - என்று பேசிக் கொண்டே இருந்தவர் திடீரென மைதானத்தைப் பார்க்கிறார். அங்கே ஒருவர் கூட இல்லை அப்பொழுது அங்கே பெருக்க வந்தவர், "சார், மேட்ச் முடிஞ்சு அரை மணி நேரம் ஆவுது, தனியா யார் கூட பேசிக்கினிக்குற? போ சார் வூட்டுக்கு".

"உத்தம வில்லன்" கமலஹாசன் (தொலைக்காட்சி உரிமம் குஜய் டிவியிடம் இருப்பதாய்க் கேள்வி - ப்ரோமோஷன் செய்ய வேண்டுமே!!)

"என்னைப் பொறுத்தவரை  இங்கே விளையாடும் 22 பேரும் உத்தம வில்லர்களே.அதாவது அவர்கள் நாட்டுக்கு உத்தமன், எதிரிக்கு வில்லன் - அந்த வகையில். பாகிஸ்தான் தோற்றால் மட்டுமே இந்தியா வெற்றி பெற முடியும். அப்படிப் பார்த்தால் இந்தியாவின் வெற்றியில் பாகிஸ்தான் சகோதரர்களுக்கும் பங்கு இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் இங்கே நாம் வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி ஒரு மூன்றாவது பரிமாணமான மனிதத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அது தான் ஒப்புக் கொள்ள வேண்டிய நிஜம். மேட்ச்சில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் தலை இழந்த என் ராணுவ வீரனுக்கு மீண்டும் தலை வந்து விடுமா? ஒரு வேளை கடவுள் இருந்தால் நடக்குமோ என்னவோ? 20 ஓவர்கள் போட்டி வந்த பிறகு 50 ஓவர்களில் சுவாரஸ்யம் சற்று குறைவாகவே உள்ளது. ஆனால் டெஸ்ட் போட்டிகளுக்கு இன்னமும் மவுசு குறையவில்லை - நல்ல திரைப்படங்களைப் போல. வருமானம் கிடைக்காது, ஆனால் வரவேற்பு எப்பொழுதும் உண்டு. என்ன இந்த ஆளு, மல்லாக்கப் படுத்துக்கிட்டு எச்சில் துப்பராறேன்னு நினைக்கத் தோன்றும், ஒன்றும் பூஜ்ஜியமும் (டிஜிட்டல்) உங்கள் டேப்புகளைத் தின்று விடும் என்று 20 வருடங்களுக்கு முன்பே எச்சில் துப்பியவன் நான். இங்கே நாம் இருக்கபோகும் 6-7 மணி நேரத்தில் உணர்ச்சிப் பிழம்பில் ஆர்ப்பரிக்கலாம். ஆனால் வெளியே செல்லும்போது ஒரு நல்ல சினிமாவைப் பார்த்த மன நிலையுடன் செல்ல வேண்டும் என்பதே என் நோக்கம். மற்றபடி வர்ணனைகள் வெறும் வாய் ஜாலம் மற்றும் கொஞ்சம் சொல் ஆளுமை கலந்த கலவை, அவ்வளவே. தோனியே அதை விளையாட்டாகத் தான் பார்க்கிறார். நீங்கள் வேட்டையாக்காதீர்கள். நன்றி வணக்கம்.

ஜெயராமன்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...