Monday, June 3, 2013

ஆடு + புலி = ஆட்டம் | களம் 3



பத்மநாபன் காரில் பயணித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவரைப் பற்றி சற்று அலசுவோம்.

இரட்டைக் குதிரை சவாரி செய்பவர்கள் அநேகம். ஆனால் இவர் வண்டியில் எண்ணிலடங்காக் குதிரைகள் பூட்டப்பட்டுள்ளன. தொழிலதிபர், கிரிக்கெட் புரவலர், கிரிக்கெட் ஆர்வலர், மாநில கிரிக்கெட் குழு தலைவர், இந்திய கிரிக்கெட் குழுவின் நாளைய தலைவராகப் போகும் இன்றைய பொருளாளர், ஆத்திகவாதி, பாசமிகு ஆனால் கோபக்கார அப்பா (தான் ஆசைப்பட்டபடி மகளுக்கு தமிழக செஸ் வீரருடன் மணமுடிக்க முடியவில்லையே என்ற வருத்தமும் கோபமும் இன்றும் உண்டு) மாநில மற்றும் மத்திய அரசியல் வட்டாரத்தில் செல்வாக்கு பெற்றவர், விரல்களில் கணிசமான அளவு கலர் கலர் ராசி மோதிரங்கள், ஆனால் எதையும் கண்மூடித்தனமாக நம்பாமல் யோசித்து முடிவெடுப்பவர், கறார் முதலாளி, ஆனால் தொழிலாளர்களுக்கு 30% போனஸ் வழங்கிய வள்ளல், சர்வாதிகாரி, எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் காரியவாதி - மொத்தத்தில் நல்லவரா, கெட்டவரா என்று வரையறுக்க முடியாத நவீன "நாயகன்".

கார் இந்திய கிரிக்கெட் குழு அலுவலகத்தின் முன் வந்து நின்றது. இவர் வருவதை அறிந்தவுடன் லலித் குமார் ஓடோடி வந்தான்.

"எல்லாரும் உங்களுக்காகத்தான் காத்திருக்கோம், தலைவர் கூட வெளியூர் ப்ரோக்ராமை கான்ஸல் பண்ணிட்டு உள்ளே உட்கார்ந்திருக்கார், சீக்கிரம் வாங்க"

"ஏன்யா, அவர் இருக்கார்னு ஒரு மெசேஜ் பண்ண மாட்டியா? இப்போ நான் போய் வழியணும்"

"உங்க நண்பர் தானே சார் அவர்?"

"அதெல்லாம் 6 மணிக்கு மேல, சரி சரி வா" என்று நடையில் வேகம் கூட்டினார் - 64 வயதுக்கு அது ஓவர் ஸ்பீட்.  பத்மநாபனின் கொழுக் மொழுக் தொப்பை நிஜமாகவே "விழுந்து" விடும் போலிருந்தது

லலித் குமார் - திராவிட நிறத்தில் இருக்கும் மார்வாடி. வட இந்தியர்கள் சிகப்பானவர்கள் என்ற கருத்தை உடைத்தெறியும் கருமை நிறக் கண்ணன். பத்மநாபன் அயோத்யா என்றால் இவர் மதுரா. கோபிகைகள் இவருடன் இருப்பர், அல்லது இவர் கோபிகைகளுடன் இருப்பார். ஆனால் வேலையில் கில்லாடி. லலித்தின் தமிழ் ஆங்காங்கே சிதையும். ஆனால் தமிழ் தொ(ல்)லைக்காட்சி போல் கொல்லமாட்டான்.

பத்மநாபன் வியர்வையைத் துடைத்தவாறே மீட்டிங் ரூம் உள்ளே நுழைந்தார். எல்லோருக்கும் சம்பிரதாய வணக்கத்தைச் சொல்லி விட்டு அமர்கிறார் – தலைவருக்கு மட்டும் குழைவான வணக்கம். தலைவருக்கும் இவருக்குமான நெருக்கம் ஊரறிந்த ஒன்று. பத்மநாபன் மாநிலத் தலைவர் ஆனதில் தலைவருக்குப் பெரும் பங்கு உண்டு. தனக்குப் பிறகு தலைவர் பத்மநாபனைத் தான் தேசியத் தலைவர் பதவிக்கு வழிமொழிவார் என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்ட விஷயம். ஆனால் மத்ராசிகளை வேலையாட்களாகப் பார்த்துப் பழகிய குழுவில் உள்ள ஏனைய வட இந்திய நண்பர்களுக்கு தமிழன் தலைமைப் பொறுப்புக்கு வந்து விடுவானோ என்கிற வயிற்றெரிச்சலும் பயமும் நிறையவே உண்டு.

தலைவர், "20-20 கிரிக்கெட் நம்ம நாட்டுல நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கு. அது சம்பந்தமா நம்ம லலித் குமார் ஒரு பிசினஸ் மாடல் ரெடி பண்ணியிருக்கார். நான் பார்த்தவரைக்கும் அது ஓகே. இருந்தாலும் உங்க ஒபினியன் ரொம்ப முக்கியம். அதுக்காகத் தான் இந்த மீட்டிங். லலித், ஆரம்பிங்க"

லலித் குமார் "குட் மார்னிங், ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு சின்ன கற்பனை டெஸ்ட். செஹ்வாக், பீட்டர்சன் ஒரே அணியில் ஆடினா எப்படி இருக்கும்? சச்சினும் மலிங்காவும் ஒரே டீம்ல இருந்தா எப்படி இருக்கும்? க்றிஸ் கெயிலும் ப்ரெட் லீயும் ஒரே அணியில் இருந்தா எப்படி இருக்கும்? கற்பனை பண்ணிப் பாருங்க"

அனைவரின் கண்களும் ஆச்சர்யத்தில் ஒரு சுற்று பெருக்க ஆரம்பித்தன.. ஆனால் பத்மநாபன் வழக்கம் போல தன் பணக் குதிரைக்கு சாவி கொடுக்க ஆரம்பித்தார்


******************************************************************************


"டிஸ்கவரி சானலே செத்துக் கிடக்குதேய்யா" - அந்த டைனிங் டேபிளைப் பார்த்த பொழுது இந்த வசனம் தான் நினைவுக்கு வந்தது. ரகுநாத் அவன் நண்பர்கள் மற்றும் எதிர்பாராத விருந்தினர்களுடன் வருவதை அறிந்து அவர்களுக்காக தயாரிக்கப்பட்ட அசைவ உணவு தான் அங்கே தயாராக இருந்தது.

சாப்பிடும் பொழுது பேச்சு வாக்கில் ரகு ராதேவைப் பார்த்து, "ஏன் சார், நீங்க என்ன பண்றீங்க?"

"நான் சும்மாத்தான் இருக்கேன், ஊர்ல கொஞ்சம் நிலபுலம் இருக்கு. அப்பா ஹிந்தி சினிமாவுல எடுப்பா நடிச்சாரு, நானும் சில படங்கள்ல ஹீரோவுக்கு தொடுப்பா நடிச்சேன், ரேஸ், பெட்டிங்க்னா கொள்ளைப் பிரியம். ஊட்டி, பெங்களுருன்னு ஒரு ரேஸ் விடமாட்டேன். நிறைய சினிமாவுல நடிக்கலைன்னாலும் எனக்குத் தெரியாத பாலிவுட் ஹீரோக்களே கிடையாது. எல்லோரும் அவ்ளோ க்ளோஸ்"

பாலா உற்சாகமாகி, "அப்போ நீங்க இந்த நட்சத்திரப் பார்ட்டிக்கெல்லாம் சகஜமா போவீங்கன்னு சொல்லுங்க, ஒரே குஜாலா இருக்குமே?"

"ஐயோ நீங்க வேற, அங்க தான் நான் பழியா கிடப்பேன். "ஏன்யா, பார்டிக்குன்னே உன் குடும்பத்துல உன்னை நேர்ந்து விட்டுட்டாங்களா" அப்படின்னு மொஹிந்தர் கூட அடிக்கடி கிண்டல் பண்ணுவாப்ல.

ஹர்கிரத் "இவன் பார்ட்டிக்கு வர்றான்னாத் தான் நாங்களே போவோம். சூப்பரா எண்டெர்டைன் பண்ணுவான்"

ராதே, "டைம் கிடைச்சா மும்பை பக்கம் வாங்க, செமையா என்ஜாய் பண்ணலாம்" என்று கூறி கண்ணடித்தான்.

ரகு அவனைப்பார்த்து ஒரு பொய்யான புன்னகையைச் சிந்தினான்."இவன் ஒரு டைப்பான ஆளு போல, இவன்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.


ஆட்டம் தொடரும்......


Jayaraman
New Delhi



1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...