Thursday, September 22, 2011

பிசிசிஐ "தலை" யுடன் ஒரு நறுக் இண்டர்வியூ



பிசிசிஐயின் புதிய தலைவர் ஸ்ரீனிவாசனுடன் ஒரு நேர்காணல். உடன் உரையாடுபவர், சமீப காலமாக காணாமல் போயிருக்கும் விவேக்:

விவேக் உள்ளே நுழையும் நேரம், ஸ்ரீனிவாசன் ஏதோ ஒரு பாக்கெட்டைப் பிரித்து வாயில் போட்டுக் கொள்கிறார்.

"ஆஹா, ஒரு மூல்சந்த் மாணிக்சந்த் போடுதே!"

"அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா, இது என் ரத்தக் கொதிப்புக்கான மாத்திரை"

"எதுக்கு சார் மாத்திரையெல்லாம் ? என் காமெடி கிளிப்பிங்க்ஸ் பார்த்தீங்கன்னா ரத்தக்கொதிப்பு தானா அடங்கிடப் போவுது"

ரத்தக்கொதிப்பு வந்ததே உன் காமெடி பார்த்துத்தாண்டா, இப்பதான் மாப்பிள்ளை படம் பார்த்துட்டு வரேன், காமெடியாடா அது?

விவேக் பேச்சை மாற்றும் முயற்சியாக, "ஆனா உங்களால நிறைய பேருக்கு ரத்தக் கொதிப்பு வந்திடும் போலிருக்கே, இப்படி திடீர்னு ஆக்ஷன் கிங் அர்ஜுன் ரேஞ்சுக்கு பின்றீங்களே, என்ன காரணம்?"

"எங்க மேல மக்களுக்கு நம்பிக்கை குறைய ஆரம்பிச்சிடுச்சு, பிசிசிஐ சரியில்லை, அது இதுன்னு ஏகப்பட்ட புகார், பேரு கேட்டுப் போவுது, அதெல்லாம் சீக்கிரம் சரி பண்ணனும். அதுக்குத் தான் களை புடுங்கறேன்"

" கேரளா தமிழ்நாட்டுக்கு தண்ணி தரலைங்கரதுனாலதான் நீங்க கொச்சி டீமை தொரத்திட்டீங்களா?, ஐ அப்பிரிஷியேட் யு"

"அதெல்லாம் இல்லை, வர வேண்டிய கட்டிங் வரலை, அதான்"

"கட்டிங்கா? சார் நீங்களுமா?"

"யோவ், பிசிசிஐக்கு வர வேண்டிய பைசா வரலைன்னு சொன்னேன், நீ பாட்டுக்கு எதையாச்சும் பிரிண்ட் பண்ணிடாதே,

"வெஸ்ட் இண்டீஸ் டூரை கான்செல் பண்ணிட்டீங்க சரி, அப்படியே இங்கிலாந்து டூரையும் கான்செல் பண்ணியிருக்கலாமே? ஏன் பண்ணலை? வீரர்களுக்கு இன்னும் ஓய்வு கிடைச்சிருக்குமே? "

"எனக்கு பைசா கிடைக்காதே"

"என்ன சொல்றீங்க?"

"இங்கிலாந்து டூர்ல இந்தியா பழிவாங்கும்னு நம்பி மக்கள் ஸ்டேடியத்துக்கு வருவாங்க, டிக்கெட் நல்லா சேல்ஸ் ஆகும். வெஸ்ட் இண்டீஸ் டூர்ல எவன் வருவான்? நானே அந்த மேட்சை பார்க்க மாட்டேன், அதுவுமில்லாம, வெஸ்ட் இண்டீஸ் ஒரு பிச்சைக்கார கிரிக்கெட் வாரியம், வீரர்களுக்கு சம்பளம் குடுக்கறதுக்கே காசில்ல, நம்ம பேச்சு அவங்க கிட்ட எடுபடும், ஆனா இங்கிலாந்து அப்படியா? ஒரு பருப்பும் வேகாது.

"வெரி இன்னொசென்ட் மேன், வெகுளியா பேசறீங்க"

"சின்ன திருத்தம், உண்மையைப் பேசறேன்"

"CSKவுக்கும் எனக்கும் தொடர்பில்லைன்னு சொல்லியிருக்கீங்களே?"

"ஆமாம் உண்மை தான், அது இந்தியா சிமென்ட் கம்பனிக்குச் சொந்தம் "

"அப்போ இந்தியா சிமெண்ட்ஸ் MD நீங்க இல்லையா?"

" அது நான்தான், ஆனா எனக்கும் CSKவுக்கும் தொடர்பில்லை"

"அது எப்படி சார்? சரக்கு உங்களுது, சைடு டிஷும் உங்களுது, ஆனா போதை மட்டும் எனக்கு சொந்தமில்லைன்னு சொல்றீங்க?

"தம்பி, நீ ரொம்ப பேசறே, உன்னை வேலையை விட்டு தூக்கிடுவேன்"

"சார், நான் தான் இங்க வேலையே செய்யலையே"

"ஓ, ஐ ஆம் சாரி, ரொம்ப பரபரப்பா இருக்கேனா, அதான் ஒண்ணும் புரியல"

"நமக்குள்ள என்ன பார்மாலிட்டி மிஸ்டர் கோண்டா ரெட்டி"

"டேய்"

"இன்னொரு மேட்டர் சொல்லுங்க, நீங்க நேரடியாவே IPL டீம் வாங்கி அதுல தோனி மாதிரி பெரிய ஆளுங்களையெல்லாம் புடிச்சுப் போட்டு இன்னிக்கு அதை NO .1 டீமா ஆக்கிட்டீங்க. ஆனா லலித் மோடி பினாமி டீம்ல அதுவும் ஷில்பா ஷெட்டி மாதிரி கஷ்டப்படற பெண்களுக்காக ஒரு டீம் வாங்கினாரு, ஆனா இன்னிக்கு அவரு எங்கயோ ஓடி ஒளிஞ்சு உக்காந்திருக்காரு, அது எப்படிங்க?

I dont mix business with pleasure. அது வேறு, இது வேறு

"ஆனா IPL இவ்ளோ பெரிசா பேமஸ் ஆகறதுக்கு அவர் தானே காரணம்"

"நான் இல்லேன்னு சொல்லலையே? பட் எல்லாத்துலயும் ஒரு எதிக்ஸ் வேணும், அது அவன் கிட்ட இல்லை அதான் அழிஞ்சு போயிட்டான்.

"சரி அது போகட்டும், இனிமே தமிழ்நாட்டு வீரர்களுக்கு இந்திய அணியில் ரெகுலரா விளையாட வாய்ப்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கலாமா?"

"அதெல்லாம் முடியாது, டேலன்ட் தான் முக்கியம். இங்கிலாந்து டூர்ல கூட பத்ரியைத் தான் கூப்ட்டோமே தவிர விஜய்க்கு வாய்ப்பு குடுக்கலையே நாங்க"

"என்ன இப்படி அநியாயத்துக்கு நியாயமா இருக்கீங்க? நம்ம ஆளுங்களும் முன்னேற வேண்டாமா சார்?"

"அதெல்லாம் அப்படி தனிச்சையா முடிவெடுக்க முடியாதுப்பா.பிசிசிஐ தலைமை அதிகாரின்னா எது வேணும்னாலும் செய்யலாம்னு நினைக்காதீங்க, எனக்கும் மேல ஒரு கூட்டம் இருக்கு"

"அந்தந்த ஊர்க்காரங்க வரும்போது அவங்க ஊர் மக்களுக்கு எதாச்சும் செய்யறது நம்ம நாட்டுல வழக்கம் தானே?"

"கரெக்ட் தான், ஆனா அதையே நாம பண்ணினா ஊர்ப்பட்ட குற்றம் சொல்வானுங்க. ஏன்னா நாமெல்லாம் மதராசி- நான் தமிழன், ஸ்ரீகாந்த் தமிழன். ஆரம்பத்திலேர்ந்தே அவங்களுக்கு நம்மளைக் கண்டா ஆவாதே, இவ்ளோ நாள் பிசிசிஐல இருந்து இப்போ தான் தமிழ் ஆளுங்களுக்கு வாய்ப்பு குடுக்க முடியுது. கர்நாடகா மற்றும் மும்பையோட ஆதிக்கம் இன்னும் இருக்கத்தான் செய்யுது. நான் இந்த பொசிஷனுக்கு வர்றதுக்கு என்ன பாடு பட்டேன்னு எனக்குத் தான் தெரியும்.

"ரொம்ப கிரிக்கெட் விளையாடினதுல வீரர்களுக்கு மனச்சோர்வு ஆயிட்டுதாமே, அப்படியா?"

"அதெல்லாம் சுத்தப் பொய், மற்ற நாட்டு வீரர்களும் இதே அளவு கிரிக்கெட் ஆடத்தான் செய்யறாங்க. இங்கிலாந்தைப் பாருங்க, ஆஸ்திரேலியாவைப் பாருங்க, அங்கயும் இஞ்சுரி கேசுங்க நிறைய இருக்கு. நாங்க யாரையும் ஆடச்சொல்லி கம்பெல் பண்றது இல்லை"

"என்ன சார் பத்து ரூபாய்க்கு கேள்வி கேட்டா நூறு ரூபாய்க்கு பதில் சொல்றீங்க?"

"எப்படியும் உன்னோட அடுத்த கேள்வி இதுவாதான் இருக்கும், அதான் முன்னாடியே பதில் சொல்லிட்டேன்"

"கங்கூலியை ஆலோசனைக் குழுவில சேர்த்துக்கப் போறதா ஒரு பேச்சு அடிபடுதே?"

"ஆமாம், முன்னாடி இருந்தவங்க கவாஸ்கருக்கும் சாஸ்த்ரிக்கும் ரொம்ப செல்லம் குடுத்து கெடுத்துட்டாங்க. அதான் புதுசா ஆளுங்களைப் போடப்போறேன்"

வேற என்னவெல்லாம் பண்ணலாம்னு இருக்கீங்க?

MRF pace foundation மாதிரி அல்லது அதையே இன்னும் பெரிசா விரிவுபடுத்தணும்

"நிறைய வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கறதுக்கா?

"அட நீ வேற, பௌலர்னு சொல்லிட்டு வந்தவன் எல்லாம் கடைசியில பேட்ஸ்மேன் ஆகி அழிஞ்சு போன கதை நமக்குத் தெரியாதா? இது நம்ம பேட்ஸ்மேன்களுக்குத் தான். பய புள்ளைங்க, இங்கிலாந்து ஆஸ்திரேலியான்னு போனா ரொம்ப அடி வாங்கரானுங்க."

நடுவே ஸ்ரீனிவாசனின் போன் ஒலிக்கிறது. பேசி முடித்தவுடன் அவர் முகத்தில் லேசான சோகம்

"என்ன சார் ஆச்சு? அதுக்குள்ளே உங்க பதவியை புடிங்கிட்டாங்களா?

"காமெடி பண்ணாதப்பா, பட்டோடி தவறிட்டாராம்ப்பா, நான் உடனே டெல்லி போயாகணும்"

"யார் சார் அவரு? கரீன கபூரோட வருங்கால மாமனாரா?

கடுப்பாகி, "முன்னாள் இந்திய அணியின் கேப்டன்னும் சொல்லலாம் அவரை"

"பாத்தீங்களா!, இவளவு தான் சார் நாங்க, செத்தாத்தான் அவர் யாருன்னே தெரிய வருது, அசாருதீன் பையன் செத்த பிறகு தான் "ஒ, அசாருதீன் இன்னும் உயிரோட தான் இருக்காரா" அப்படின்னு கேக்கறாங்க. டிவில கமெண்டரி சொல்றவங்க மட்டும் தான் ஏதோ நாட்டுக்காக ஆடின மாதிரியும் மத்தவங்கல்லாம் ஒழிஞ்சு போயிட்ட மாதிரியும் ஒரு மாயை உருவாகியிருக்கு. இதுக்கு நீங்க கண்டிப்பா எதாச்சும் செய்யணும்"

"நல்ல பாயிண்ட் சொல்லியிருக்கே, கண்டிப்பா எதாச்சும் செய்யறேன், ப்ளைட்டுக்கு நேரமாச்சு, நான் கிளம்பறேன்"

"கடைசியா ஒரு மேட்டர், உங்களுக்கும் லலித் மோடிக்கும் அப்படி என்னதான் சார் தகராறு?"

ஸ்ரீநிவாசன் கண்களில் கோபம் கொப்பளிக்க, "டேய், அவன் மட்டும் கிடைச்சான்னா, அப்படியே கழுத்தைத் திருகி, கொலை பண்ணி, விஷம் கொடுத்து, ஷூட் பண்ணி...

"ஆஹா, ஸ்ரீநிவாசன் இப்படி கோட்டா ஸ்ரீனிவாச ராவா மாறுவார்னு நான் எதிர்பாக்கலையே, ஐ ஆம் எஸ்கேப்..."


Jayaraman
New Delhi

பின்குறிப்பு: உங்களுக்குப் புடிச்சிருந்தா லைக் போடுங்க, பிடிக்கலைன்னாலும் லைக் போடுங்க, லைக் போடறதுல என்னங்க ஆயிடப்போவுது? அதுக்காக நீங்க ரொம்ப தூரமெல்லாம் போகவேண்டாம், கொஞ்சம் அப்புல பாருங்க. ஒரு பொத்தான் இருக்கு, அதை அமுக்கினா போதும்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...