Monday, September 19, 2011

இந்தியாவின் England சுற்றுப் பயணம் - நிறைவுப் பகுதி


லண்டன் விமான நிலையம்.

இந்திய வீரர்கள் வரிசையாக விமானத்தில் ஏறி அவரவர் இருக்கைகளில் அமர்ந்த வண்ணம் உள்ளனர். அஷ்வின் தனது பேக்கை லாப்டில் நுழைக்க முயற்சிக்கிறார். அப்போது பின்னால் ஏதோ பழக்கப்பட்ட குரல் பயணிகள் சேவகியுடன் சண்டையிடுவது தெரிகிறது. அருகில் சென்று பார்க்கிறார் அஷ்வின், அவரால் நம்பவே முடியவில்லை - T ராஜேந்தர், கேப்டன் விஜயகாந்த் மற்றும் வடிவேலு மூவரும் அமர்ந்திருக்கின்றனர்.

அஷ்வின் குஜாலாகி, "ஆஹா, என்ன சார் நீங்க எப்படி இங்க? வடிவேலு, நீங்க எப்படி விஜயகாந்தோட? உடனே விமானப் பெண்மணியிடம் "மேடம், எங்க ஆளுங்க தான், நாங்க பார்த்துக்கறோம்". அவர் TRஐ முறைத்தபடியே செல்கிறார்.

"டேய் பத்ரி, இங்க பார்றா எட்டாவது அதிசயத்தை"

பத்ரியும் ஓடி வந்து பார்க்கிறார், "அட, என்ன வடிவேலு சார், கேப்டனோட செட்டில் ஆயிட்டீங்க?

விஜயகாந்த் (கால்களுக்கு மசாஜ் செய்தவாறே), " எங்க பிரச்சினையை நாங்க மனசு விட்டுப் பேசி சுமுகமா தீர்த்துக்கிட்டோம். என்ன வடிவேலு, அப்படித் தானே?"

வடிவேலு, "ஆமாம்ங்க, அண்ணன் எல்லாத்தையும் சரி பண்ணி ...... முடிச்சிட்டார்"

பத்ரி வடிவேலுவிடம் ரகசியமாக, "என்ன சார், அவர் மசாஜ் பண்ணிக்கிட்டிருக்காரு, வழக்கமா இந்த மாதிரி சீன்ல உங்களுக்கில்ல ஒத்தடம் குடுப்பாங்க?"

வடிவேலு, "என் வரலாறு தெரிஞ்சும் வழக்கம் போல காலை சுவத்துல வெச்சு சுழட்டி சுழட்டி அடிக்கப் பார்த்தாரு, நம்ம கிட்ட நடக்குமா? மூத்திர சந்துல ஒரு வாரம் முழுக்க தங்கியிருந்து அடி வாங்கிட்டு வந்த உடம்புன்னு பாவம் அண்ணனுக்கு தெரியல. அதான் உதைச்சு உதைச்சு ஓஞ்சு போய் இப்போ காலுக்கு களிம்பு போட வேண்டிய நிலைமை, எங்க கிட்டயேவா?"

இதற்குள் விமானி டேக் ஆப் அறிவிப்பு செய்யவே, அனைவரும் இருக்கைகளில் அமர்கின்றனர். நடுவானில் உரையாடல் தொடர்கிறது.

ராயினா நக்கலாக , "யாருப்பா அவரு புதுசா கேப்டன்? எந்த டீமுக்கு ஆடறார்? தள்ளுங்க,நானும் கொஞ்சம் பாக்கறேன்"

தோனி நடுவில் புகுந்து, "தம்பி, அடக்கி வாசி. அவர் அம்மா டீம்ல இருக்காரு. அவசரப்பட்டு வாயை விடாதே, அப்புறம் அடுத்த அஞ்சு வருஷத்துக்கு நீ CSKவுக்கு விளையாட முடியாது.

விராட், "இங்க என்னப்பா ஒரே முடியா இருக்கு?"

TR சீட்டிலிருந்து தலையை உயர்த்தி முடியை கோதி விட்டபடியே, "தம்பி, , என்கிட்டே வெச்சுக்காதே வம்பு, இங்கிலாந்துக்காரன் உங்களுக்கெல்லாம் அடிச்சான் பம்பு, நீயெல்லாம் எனக்கு சிறு தும்பு, என் பையன் பேரு சிம்பு, அவன் விடறதோ மன்மத அம்பு.

விராட், "ஒண்ணும் புரியல, ஆனா டர்ரைக் கிளப்பறாரே மனுஷன்"

பத்ரி, "அதான் அவரோட ஸ்பெஷாலிடி, ரொம்ப வாயை விடாதே, அவ்வளவு தான் சொல்வேன்"

வடிவேலு, "ஏதோ சின்னப் பையன் தெரியாம பேசிட்டான், மன்னிச்சு விடுவீங்களா!"

விஜயகாந்த், "என்னது மன்னிப்பா?"

வடிவேலு மனசுக்குள், "அய்யோயோ, இந்தாளுக்குத் தான் இந்த வார்த்தையே புடிக்காதே, வில்லங்கத்தை விலை குடுத்து வாங்கறோமே!!"

தோனி "TR சார், எங்களுக்காக கமெண்டரி டீமோட சண்டை போட்டதுக்கு ரொம்ப நன்றி"

TR, "அது என் கடமை, ஆனாலும் சரியா விளையாடாம இருந்தது உங்க மடைமை"

ராயினா, "அதுக்கென்ன சார் பண்றது? நாங்கல்லாம் கவுன்டி டீம்ல கூட விளையாடினதில்ல, எங்களைப் போய் திடீர்னு இங்கிலாந்துல ஆடச் சொன்னா? மத்தவங்க எல்லாம் உஷாரா சாக்கு சொல்லி எஸ்கேப் ஆயிட்டாங்க, பாவம் நானும் அண்ணனும் தான் நல்லா மாட்டிக்கிட்டோம்"

வடிவேலு, "ஆமாம் எங்கப்பா அந்த நல்ல மனுஷன்? பாவம் தனியாளா எவ்வளவு மேட்சில போராடியிருக்காரு"

"யாரைக் கேக்கறீங்க?"

"நல்ல மனுஷன்னு சொன்னேனே, அப்பவே புரிஞ்சுக்க வேண்டாம் டிராவிட் தான்னு!"

தூங்க எத்தனித்த திராவிட்டை அழைத்து வருகின்றனர். வழக்கம் போல் மிகவும் சாதுவாக எல்லோருக்கும் வணக்கம் சொல்கின்றார்.

TR "டிராவிட், "அமைதியாக இருப்பவனைத் தான் உலகம் சீண்டும் என்பதற்கு நீ ஒரு உதாரணம், வீரர்களை அவமதிப்பது பிசிசிஐக்கு சாதாரணம், ஏன்னா அவங்க குறிக்கோள் வெறும் பணம். ஆனால் உன்னைப் போன்றவர்களுக்கு அது ஸ்பெஷல் "ரணம்"

டிராவிட், "நீங்க பேசினது பாதி புரியுது, பாதி புரியல, தப்பா எடுத்துக்காதீங்க, நேத்திக்குப் பசங்க ஷாம்பெயினை பீச்சி அடிச்சதுல சைனஸ் ஜாஸ்தி ஆயிடுச்சு, தலை வலிக்குது, நான் தூங்கப் போறேன்"

தோனி, "வடிவேலு சார், அஷ்வின் உங்க காமெடி கிளிப்பிங்கெல்லாம் எங்களுக்குக் காட்டியிருக்கான், அதைப் பார்த்து தான் இங்கிலாந்து கிட்ட எவ்வளவு அடி வாங்கினாலும் வலிக்காத மாதிரியே என்னால நடிக்க முடிஞ்சுது"

வடிவேலு, "ஏம்பா அஷ்வின், இந்தாள் என்னிய வெச்சு காமெடி கீமடி எதாச்சும் பண்றாரா? ஏற்கனவே என் பொழைப்பு சிரிப்பா சிரிக்குது"

விஜயகாந்த் , "என் வீடியோவைக் காட்டியிருக்க வேண்டியது தானே அஷ்வின்? அட்டாக் பண்றது எப்படின்னு இன்னும் நல்லா கத்துக்கிட்டிருக்கலாம்ல?

ராயினா கோலியிடம், "வேற வினையே வேண்டாம், இங்கிலாந்து கிட்ட அடி வாங்கினதுக்கே அண்ணன் மந்திரிச்சு விட்டா மாதிரி இருக்காரு, இதுல இந்தாள் படத்தைப் பார்த்தா.... சுத்தம் "

TR "அங்கே என்ன குசுகுசு? என்னை வெச்சு இதுவரைக்கும் வந்ததில்ல கிசுகிசு"

வடிவேலு,"ஆமாம், மத்த ஆளுங்க எல்லாம் என்ன இப்படி ஏறினதும் தூங்கிட்டாங்க? அவ்வளவு அலுப்போ?"

தோனி, "அந்த அளவுக்கு அடி, ஊருக்குப் போனாத் தான் தெரியும், எவனுக்கு எங்க டேமேஜ்ன்னு"

விராட், "எல்லாம் உங்களை மாதிரி தான் வடிவேலு சார், பில்டிங் ஸ்ட்ராங்கு, ஆனா பேஸ்மென்ட் வீக்கு"

வடிவேலு, " இந்த விஷயம் நார்த் இந்தியா வரைக்கும் நாறிடுச்சா? ச்சே!"

விஜயகாந்த்,"சரி தோனி, இப்போ அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அப்புறம் இங்கிலாந்து இந்தியா வராங்க, அதுல எப்படியும் ஜெயிச்சிடுவீங்கல்ல?"

தோனி,"அதுல தான் பிரச்சினையே, ஜெயிச்சா, இவனுங்க உள்ளூர்ல மாடு பிடிக்கத் தான் லாயக்குன்னு சொல்வாங்க, தோத்துட்டா கழுதை மேய்க்கக் கூட லாயக்கில்லைன்னு சொல்வாங்க. பெரிய தலைவலி தான் போங்க"

பத்ரிநாத் நக்கலாக , "ஏன் வடிவேலு சார், தேர்தலின் போது விஜயகாந்தையும் தோனியையும் ஒப்பிட்டு தாறுமாறா பேசினீங்களே, யாரு சார் எழுதிக் கொடுத்தது?"

"ஏன்யா அதையே சும்மா நோண்டறீங்க?அவரே இப்பதான் இறங்கி வந்திருக்காரு"

அஷ்வின் "தப்பா எடுத்துக்காதீங்க, நாங்கல்லாம் ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கோம், உங்களையெல்லாம் பார்த்தது கொஞ்சம் ஆறுதலா இருக்கு, அதான் பத்ரி கொஞ்சம் சீண்டராப்ப்ல"

வடிவேலு மனசுக்குள் "ஹ்ம்ம் எல்லாப் பயலும் நம்மளை டைம் பாசுக்குன்னே வெச்சிருக்கானுங்க, நடத்துங்கடா"

TR 'நீ என்ன தான் சொன்னாலும் இந்த டூர் இந்திய கிரிக்கெட்டில் ஒரு கறுப்பு சரித்திரம், ஏன்னா அதைப் புடிச்சிருக்கு பிசிசிஐன்னு ஒரு தரித்திரம்"

தோனி, "உண்மை தான், அதனால இனிமே டீம் செலக்ஷன்ல ஸ்ட்ரிக்டா இருக்கறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்"

வடிவேலு, "எப்படி எப்படி எப்படி?"

தோனி, "நான் சொன்ன மாதிரி ஆளுங்களை எடுக்கலைன்னா உண்ணா விரதம் இருந்து போராடுவேன்"

விஜயகாந்த், "உண்ணா விரதமா? அதெல்லாம் வயசானவங்க செய்யறது, நம்மள மாதிரி யூத்தெல்லாம் அதிரடியா இருக்கணும்"

ராயினா, "நம்மள மாதிரி யூத்தா?"

விஜயகாந்த் ராயினாவை எரித்து விடுவது போல் பார்த்துவிட்டு, "அதாவது நீங்க கேக்காதவனை டீம்ல அவங்க வலுக்கட்டாயமா சேர்த்து விட்டாங்கன்னா அவன் பேட்ல பாம் இருக்குன்னு சொல்லி அவனை பாகிஸ்தான் தீவிரவாதியா ஆக்கிடுவோம், அப்புறம் நடு பிட்ச்ல என்கௌன்டர் தான்"

வடிவேலு, "பாலிடிக்ஸ்ல வந்த பிறகும் பழக்கத்தை மாத்தமாட்டேங்கறாரே!"

TR "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும், விஜி, பார்த்து, அதே பழக்கத்துல சட்டசபையில போய் எதாச்சும் பண்ணிடப் போறே"

"சேச்சே, அங்கெல்லாம் ஸ்டெடியாத்தான் இருப்பேன், அப்புறம் நம்மளை என்கவுண்டர்ல போட்டுடுவாங்க"

பத்ரிநாத்," TR சார், வழக்கத்துக்கு மாறா ரொம்ப அமைதியா இருக்கீங்களே? உடம்பு சரியில்லையா?

TR , "உங்களையெல்லாம் நாக்கைப் புடிங்கிக்கற மாதிரி நாலு கேள்வி கேக்கணும்னு தான் இருந்தேன். அப்புறம் விட்டுட்டேன்"

"ஏங்க?"

"எப்படியும் நீங்க சாம்பியன்ஸ் லீகல நல்லா விளையாடுவீங்க, அதுக்கும் மீடியா உங்களை கிழிகிழின்னு கிழிக்கப் போறாங்க"

"எப்படி?"

"இவங்களுக்கு முக்கியம் காசு, நாடெல்லாம் இவங்களுக்கு தூசு, பிசிசிஐ தான் இவங்களுக்கு பாசு, மொத்தத்துல எல்லார் மேலயும் இருக்குது மாசு, ஏ டண்டணக்கா டணக்குடக்கா"

தோனி,"யோவ் பத்ரி, சும்மா இருக்க வேண்டியது தானே? இப்ப பாரு, வாயைக் குடுத்து நாக்கைப் புண்ணாக்கிக்கிட்ட மாதிரி ஆயிடுச்சு"

விமானி லேண்டிங் அறிவிப்பு செய்கிறார்

தோனி, "சரி சார், எங்களோட பேசினதுக்கு உங்க மூணு பேருக்கும் நன்றி"

அஷ்வின், "ஆமாம் உள்ள வரும்போது TR சார் அந்தப் பொம்பளையோட சண்டை போட்டாரே, எதுக்கு?"

வடிவேலு,"அந்தக் கூத்தை ஏன் கேக்கறீங்க, சார் நிறைய தலைமுடியும் தாடியும் வெச்சிருக்காராம், அது எக்ஸ்ட்ரா லகேஜ் ஆயிடுச்சாம், ஒண்ணு கட் பண்ணுங்க, இல்லேன்னா காசு குடுங்கன்னு அக்கப் போர் பண்ணிட்டுப் போயிடுச்சு அந்த அம்மா"

TR , "எனக்கு அடையாளம் என் தாடி, அதை எடுன்னு சொல்லிச்சு அந்த லேடி, நான் சொன்னேன் சரி தான் போடி, அதனால தான் அவங்க முகம் போயிடுச்சு வாடி, இன்னும் நான் நல்லா காட்டுவேன் பாடி, ஆனா என்னிக்குமே நான் காட்டமாட்டேன் body "

TR பார்முக்கு வருவதை அறிந்து அனைவரும் உஷாராகி சீட்டுக்குப் போகின்றனர்.

விஜயகாந்த் எழுந்து தோனிக்கு சல்யூட் அடிக்கிறார்.

"எதுக்கு சார்?"

"நீங்க இப்ப லெப்டினன்ட் ஆச்சே!"

"அது வெறும் கௌரவப் பதவி தான் சார்"

"பதவி கௌரவமா இருந்தாலும் அந்த யூனிபார்முக்கு என்னிக்கும் எப்பவும் மரியாதை இருக்கு. இந்த கேப்டன் என்னிக்குமே அதை மதிப்பான்"

ப்ளைட்டில் எல்லோருக்கும் பீலிங்க்ஸ் ஆப் இந்தியா....


Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...