Friday, March 30, 2012

இதைப் படிக்காதீங்​க - 2

ஒரு போட்டிக்காக சவுத் ஆப்ரிக்கா வரை செல்ல வேண்டுமா என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் புலம்பினாலும் IPL அணிகள் படு குஷியில் இருக்கின்றன. இதை சாக்காக வைத்து IPLக்குத் தேவையான அனைத்து விளம்பர ஷூட்டிங்கையும் கையோடு முடித்து விடலாம் என்பது அவர்களின் திட்டம்.

மீடியா தன்னை தொடர்ந்து வம்புக்கு இழுப்பதில் நொந்து போயிருக்கிறார் சாதனை நாயகன். சம்பந்தப்பட்ட நண்பரே சைலன்டாக இருக்கும்போது இவர்கள் ஏன் நாரதர் வேலை பார்த்து குளிர் காய்கிறார்கள் என்று கடுப்பில் இருப்பதாகவும் தகவல்.

IPLக்கான ஒட்டுமொத்த டிக்கட்டுகளையும் சம்பந்தப்பட்ட அணிகள் மற்றும் விளம்பரதாரர்கள் தலையில் கட்டி விட்டு தன் கல்லாவை நிரப்பிக் கொண்டுள்ளது வாரியம். மேற்கொண்டு டிக்கெட்டுகளை விற்பது உங்கள் பாடு என்று ஒதுங்கி விட்டதாம். இருக்கிற ரோதனை போதாதென்று இது வேறயா என்று முழி பிதுங்கி நிற்கின்றன அணிகள்.

பண்டிகை மற்றும் விடுமுறை தினத்தன்று மட்டுமே நட்சத்திர நடிகர்களின் படம் வெளியாக வேண்டும் என்று சட்டம் இருக்கும்போது மாப்பிளை நடிகரின் நம்பர் படம் மட்டும் எப்படி வெளியாகிறது என்பது தான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக். இதற்காக அரசியன் வாரிசின் "சரி சரி" படம் புத்தாண்டுக்குத் தள்ளி வைத்திருப்பதாகவும் தகவல். நம்பர் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று மாமனார் கருத்து தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் உடனே ரிலீஸ் செய்தால் தான் கலெக்ஷன் பார்க்க முடியும் என்று சொல்லிவிட்டாராம். என்னை விட அரசியல் வாரிசு பெரிய ஸ்டாரா என்று மாப்பிள்ளை புலம்பினாலும், "கூட்டி கழிச்சுப் பாருங்க, அப்பா போடும் கணக்கு சரியா வரும்" என்று மனைவி சொல்வதால் அடக்கி வாசிப்பதாக தகவல்.

சென்னை வீரரும் அனுஷ நடிகையும் நெருங்கிப் பழகுவதாக வெளியான தகவலில் அருந்ததி நடிகைக்கு பரம சந்தோஷமாம். இவருக்கும் வீரருக்கும் எந்தத் தொடர்பும் இல்லாவிட்டாலும் அது தான் தான் என்று எல்லோரிடமும் கூறி பப்ளிசிட்டி தேடுகிறாராம். ஹ்ம்ம், எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டாங்க!!

மராட்டிய அணியில் சேர ஆஸ்திரேலிய கேப்டனுக்கு அதி பயங்கர தொகை கொடுத்துள்ள விஷயம் வங்காளப் புலிக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கந்து வட்டிக்காரரிடம் பேசியுள்ளார். அவரோ "உனக்கு வாய்ப்புக் குடுத்ததே பெரிய விஷயம், அதிலும் கேப்டனாக வேறு போட்டிருக்கிறேன், வாயை மூடிக் கொண்டு இரும்" என்று கூறி புலியை ஆப் செய்துவிட்டாராம்.

"கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு" என்று பாடிய காலம் போய் தற்பொழுது அனைத்து IPL அணிகளும் தங்கள் ஜெர்சியிலிருந்து கறுப்பு நிறத்தை எடுத்துவிட்டன. ஏற்கனவே வெயில் காலம், இதில் கறுப்பு நிறம் இன்னமும் சூட்டை அதிகரிக்கும் என்று விஞ்ஞானம் பேசினாலும் எல்லாம் ஜோதிடர்கள் அறிவுரை என்கின்றனர் விஷயம் தெரிந்தவர்கள்.

எப்படியும் உலகப் பட விழாவில் திறமை காட்டியே தீர வேண்டுமென்று விஸ்வரூபம் எடுத்து வருகிறார் உலக நாயகன். இதற்காக ஷூட்டிங்கை இரண்டாகப் பிரித்து ஒரு பாகத்தை மூக்கு நடிகரிடம் ஒப்படைத்து இருப்பதாகத் தகவல். சம்பளம் இல்லையென்றாலும் வேலையில்லாத தனக்கு வேலை கொடுத்ததற்காக உலக நாயகனைப் பற்றி எல்லோரிடமும் பெருமை பேசி வருகிறார் மூக்கு.

உச்சத்தின் புதிய படத்திற்கான பாடல்களை டைமன்டிடம் இருந்து எழுதி வாங்குவதற்குள் இசைத் தம்பிக்கு தாவு தீர்ந்துவிட்டதாம். பார்ட்டி உள்ளூரிலேயே சீமை சரக்கு தான் போடுவார், இதில் சீமையில் சீமை சரக்கு போட்டால் கேட்கவா வேண்டும்? மப்பு தலைக்கேறி பாராட்டு விழாவில் பேசுவது போல் பேசி இசைப் புயலை ரணகள டார்ச்சர் செய்திருப்பதாகவும் பேச்சு.

அணியின் போலிங் வலுவாக இல்லை என்ற குறையைப் போக்கும் விதமாக மாவட்டம் தோறும் புதிய பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுக்க ஓபன் காம்பெடிஷன் நடத்தத் திட்டமிட்டுள்ளது வாரியம். லோக்கல் திறமைசாலிகளுக்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை என்ற குறையும் இதன் மூலம் நீங்கிவிடும் என்பது ஏழுமலையானின் கணக்கு. ஆனால் ஏற்கனவே அணியில் உள்ளவர்களுக்கு ஒழுங்கான வாய்ப்புக் கொடுத்தாலே போதுமானது என்று சீனியர் வீரர் ஒருவர் கருத்து தெரிவித்து வருவதாக தகவல்.

“தள்ளாட வைக்கும்” தொழிலதிபரின் அனைத்து தொழில்களும் தள்ளாடி வரும் நிலையில் தங்கள் எதிர்காலம் என்னவாகுமென்று கலக்கத்தில் இருக்கின்றனர் "சவால்" அணியினர். அடுத்த வருடம் ஜாகையை மாற்றிவிட வேண்டுமென்று சமீபத்திய நட்சத்திர டெல்லி வீரர் தீவிரமாக யோசித்து வருகிறாராம்.

நோயிலிருந்து பஞ்சாப் சிங்கம் மீண்டு விட்டதாகக் கூறினாலும் அணியில் மீண்டும் இடம்பெறுவது சந்தேகம் தான் என்று வாரியத்தில் பேச்சு அடிபடுகிறது. சாதனை நாயகனுக்கே ஆப்பு வைக்கத் துடித்துக் கொண்டிருக்கும் கூட்டம் இவரை சூப்பு வைத்து குடித்து விடும் என்கின்றனர் அவர்கள்.

இந்த முறை சென்னை பட்டம் வெல்வது கடினம் என்று பலரும் ஆருடம் கூறி வருவது ஏழையும் ஏழுமலையானையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இருவரும் தனியே ரூம் போட்டு தீவிரமாக யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவர் வெளியே விளையாடுவார், இன்னொருவர் உள்ளே விளையாடுவார். இவர்களின் மங்காத்தாவில் ஜோக்கராகப்போவது யாரோ?

2 comments:

  1. yaarappa andha mookku nadigar? kandupudikka mudiyalaiye

    ReplyDelete
  2. mookku nadikarai theriyaatha? iyakkunaraaga "avathaaram" eduthu tholvi kandavar

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...