IPL அணிகளுக்கான ஓபனிங் பார்ட்டியில் IPL அணிகள் மற்றும் முக்கியப் பெரும்புள்ளிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அங்கே நம்ம எவர்க்ரீன் நக்கல் ஆசாமி கவுண்டர் போகிறார்:
தோனியும் ராகுல் காந்தியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். கவுண்டர் உள்ளே நுழைகிறார்:
"என்னடா ராகுல், எலக்ஷன்ல ஜெயிக்கறியோ இல்லையோ, வெள்ளையும் சொள்ளையுமா பளபளன்னு வந்துடற. ஆனா உன்னை மாதிரி ஆளுங்க எல்லாம் இப்படித் தான் இருப்பாங்க. ஆமாம், இந்த வீணாப்போனவனோட என்ன டிஸ்கஸ் பண்றே?
தோனி கோபமாகி, "ஹெலோ, யாரு வீணாப் போனவங்க?? வேர்ல்ட் கப் சாம்பியன்ஸ் நாங்க"
கவுண்டர், " பொல்லாத வேர்ல்ட் கப் ஜெயிச்சுட்டாங்க, அதுக்கப்புறம் ஒரு சீரிஸ் ஆச்சும் ஜெயிச்சீங்களாடா? சீரிஸ் விட்டுத் தள்ளு. எவ்ளோ மேட்ச் ஜெயிச்சீங்கன்னு விரல் விட்டு எண்ணிடலாம். பெரிசா பேச வந்துட்டான்! என்ன சவுண்ட் விடற? இவங்க அம்மா கிட்ட மாட்டின நம்ம மன்மோகன் மாதிரி பம்மிக்கிட்டு இருக்கணும். புரியுதா?"
தோனி டர்ராகிப் பின்வாங்குகிறார்.
கவுண்டர் சேம் சைட் கோல் போடுவதைக் கவனித்த ராகுல் காந்தி அவரை சமாதானப்படுத்தும் விதமாக,"விடுங்க கவுண்டரே, ஏதோ சின்னப் பையன் தெரியாம பேசிட்டான். இப்போ உங்களுக்கு என்ன வேணும்? புதுப் பட சான்ஸ் எதாச்சும் வாங்கித் தரணுமா? அம்மா கிட்ட சொல்லி ஒரு டீல் பேசிடுவோம். பதிலுக்கு நீங்க எங்களுக்கு என்ன செய்வீங்க?"
கவுண்டர் தோனியைப் பார்த்து, "பார்த்தியா? இதான் அரசியல்வாதிங்கறது. நேரா மேட்டருக்கு வர்றான் பாரு. பிறகு ராகுலைப் பார்த்து, "ஏன் மிஸ்டர் வைட், இங்க இவ்ளோ விவரமா பேசறீங்களே, பிரசாரத்துல இதே மாதிரி பேசியிருந்தா ரெண்டு சீட் எக்ஸ்ட்ராவா கிடைச்சிருக்குமே?"
ராகுல்,"என் நேரம் சரியில்லைங்க"
கவுண்டர், "நேரம் சரியில்லைன்னா வாட்சை மாத்து"
அப்போது ஒரு குரல், "கையையே மாத்தினாலும் ஒண்ணும் நடக்காது"
எல்லோரும் குரல் வந்த திசையையே பார்க்க, விவேக் என்ட்ரி ஆகிறார்.
"ஹாய் ஹாய் ஹாய்...லாங் டைம் நோ ஸீ யா"
கவுண்டர், "டேய், நீ எங்கடா இங்க வந்தே? ஒசீயில தண்ணி போடலாம்னா?"
விவேக், "ஏன்யா, கிழட்ஸ் நீ வரும்போது யூத் நான் வரக் கூடாதா?" பிறகு ராகுலைப் பார்த்து, "மிஸ்டர் அமுல் பேபி, வழக்கமா நமக்கெல்லாம் மூக்கு உடைபடும். ஆனா ஒரு மூக்கு, அதான் அகிலேஷ், உங்களையும் உங்க கட்சியையும் சுக்கு நூறா உடைச்சிட்டாரே? இனிமே என்ன பண்ணப் போறீங்க?"
ராகுல், "அதுக்குதான் தோனி கிட்ட ஐடியா கேட்டுக்கிட்டிருந்தேன்"
கவுண்டர், யார் இவன்கிட்டயா? டிசைன் டிசைனா முடி வளர்க்கறவன் எல்லாம் ஐடியா மணி ஆகிட முடியாது தம்பி. மண்டைக்கு உள்ளேயும் கொஞ்சம் டிசைன் போடணும்”
விவேக் டின்னர் டேபிளைப் பார்த்தவாறே,, "என்னப்பா பார்ட்டி குடுக்கறீங்க, ஒரு ஊறுகா பாக்கெட் இல்லையே? தமிழ்நாட்டு கலாசாரம் தெரியாம தமிழ்நாட்டுல பார்ட்டி வைக்கறீங்களே?"
கவுண்டர், "இங்க நான் எவ்ளோ முக்கியமான மேட்டர் பேசிக்கிட்டிருக்கேன், உனக்கு ஊறுகா முக்கியமாப் போச்சா?"
விவேக்,"ஏன் மேன் சவுண்ட் விடறே? வெற்றி தோல்வி எல்லாம் கிரிக்கெட்ல சகஜம். அங்கே இலங்கையில ஆயிரக்கணக்கில தமிழர்கள் கொல்லப் படறாங்க. ஆனா இங்க நாம இலங்கையை கிரிக்கெட்ல தோற்கடிச்சிட்டோம்னு பெருமை பேசிக்கிட்டிருக்கோம். கிரிக்கெட் நம்ம நாட்டுல முழு நேரத் தொழிலாயிடுச்சு. அதை இன்னமும் ஒரு விளையாட்டா பார்க்காதீங்க"
ராகுல், "அரசியல் பேசாதீங்கப்பா, அதுவும் இலங்கைன்னாலே அலர்ஜியா இருக்கு"
தோனி, "நாம அவங்களை வேர்ல்ட் கப் பைனல்ஸ்ல தோற்கடிச்சோம். பதிலுக்கு அவங்க நம்மளை ரெண்டு சீரிஸ்ல பழி வாங்கிட்டாங்க - ஒரு தடவை தோத்துப் போய் பழிவாங்கினாங்க. ரெண்டாவது தடவை ஜெயிச்சுப் பழிவாங்கினாங்க"
"இங்க என்ன கொள்கை விளக்கக் கூட்டமா நடக்குது? இந்த ஆத்து ஆத்தறீங்க?" என்று கமென்ட் அடித்தபடியே உள்ளே வருகின்றனர் சந்தானமும் சிம்புவும்.
கவுண்டர் சந்தானத்தைப் பார்த்து, "ஹெலோ, நீங்க இப்போ ஒரு பெரிய புள்ளி. உங்களைக் கேட்டுட்டுத் தான் படமே எடுக்கறாங்கன்னு கேள்விப்பட்டேன். ஜாக்கிரதையா இருங்க, ஏன்னா நாங்களும் ஒரு காலத்துல அப்படித்தான் இருந்தோம். இப்போ சிங்கிள் டீக்கு வழியில்லாம இருக்கோம்."
விவேக், "ஆமாம், மிஸ்டர் சொம்பு, சாரி சிம்பு ஏன் கோவமா இருக்காரு?"
சந்தானம், "அது வேற ஒண்ணும் இல்லை, உள்ளே வரும்போது பிரபுதேவா குறுக்க வந்துட்டாரு."
கவுண்டர், "பிரபுதேவா என்ன பூனையா? குறுக்க வர்றதுக்கு"
சிம்பு , "அவன் பூனை இல்லை, நரி. அவனைப் பத்திப் பேசாதீங்க, கடுப்பா வருது. வீணா என்னை இறங்க வைக்காதீங்க. அப்புறம் நான் இறங்கினேன்னா பிரச்சினை ஆயிடும்"
விவேக், "ஏம்பா இவ்ளோ சூடாவுறே? சில்லுனு ஒரு பீர் சாப்பிடறியா?"
சந்தானம், "பீரு, விஸ்கி, இது ரெண்டையும் இப்பதான் தாறுமாறா அடிச்சோம்"
ராகுல், "பீருக்கு அப்புறம் விஸ்கியா? எனக்கு வாமிட் வர்ற மாதிரி இருக்கு" என்று கூறிக்கொண்டே பாத்ரூம் பக்கம் ஓடுகிறார். துணைக்கு தோனியும் செல்கிறார்.
சந்தானம் ராகுலைப் பார்த்தவாறே, "கழுதைக்குத் தெரியுமா கட்டிங்கோட கிக்கு! ஹ்ம்ம்"
விவேக் சிம்புவைப் பார்த்து, "நீ விரும்பற பொண்ணை விட உன்னை விரும்பற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கன்னு தலைவர் சொன்னாரு. ஆனா நீ விரும்பின நயன் உன்னை விட்டுட்டு பிரபு பின்னாடி போனாங்க. பிரபு அவரை விரும்பின ரம்லத்தை விட்டுட்டு நயன் பின்னாடி போனார். இப்போ நயன் பிரபுவையும் தூக்கிக் கடாசிட்டாங்க. கூட்டிக் கழிச்சுப் பார்க்கும்போது, நீ ஏன் ரம்லத்துக்கு வாழ்க்கை குடுக்கக் கூடாது? ஒரு புரட்சி பண்ணின மாதிரியும் இருக்கும்"
சந்தானம், "என்னது ரம்லத்துக்கு வாழ்க்கை குடுக்கறதா? அப்புறம் எங்க வாழ்க்கை என்னாவுறது? ஏற்கனவே அந்த அம்மா பிரபுவை சுத்தமா போண்டி பண்ணி அனுப்பிடிச்சு"
சிம்பு, "லூசுப் பொண்ணுன்னு அவளைப் பார்த்துப் பாடினேன். கடைசிக்கு அவ எங்க ரெண்டு பேரையும் லூசாக்கிட்டுப் போயிட்டா"
விவேக், "ஆமாம், எங்க கிரிக்கெட் வீரர்கள் யாரையுமே காணோமே?"
சந்தானம், "பாதிபேருக்கு பயணக் களைப்பு, கட்டிங் போட்டு தூங்கப் போயிருப்பாங்க. திராவிட் மாதிரி சின்சியர் சிகாமணிங்க பயிற்சிக்குப் போயிருக்கும். மிச்சம் மீதி இருக்கறதுல பாதி எச்சகுடி குடிக்கப் போயிருக்கும். மீதி எதாச்சும் வெள்ளைக்கார பிகரைத் தள்ளிக்கிட்டு மெரினா பீச் பக்கம் பதுங்கியிருக்கும்"
இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது சச்சின் க்ராஸ் ஆகிறார்.
சந்தானம், "வணக்கம் தலை"
சச்சின், "நான் இல்லை தலை, ஹர்பஜன் தான் தலை. நான் ஒரு சாதாரண ப்ளேயர்"
விவேக், "ஏன் கேப்டன் பதவின்னா பயமா?"
சச்சின், "புதிய தலைவர்கள் வரணும். அதுக்குத் தான்"
கவுண்டர், "அப்படியே கொஞ்சம் புதிய ப்ளேயர்ஸும் வரணும்னு நினைச்சீங்கன்னா நம்ம டீமுக்கு நல்லது. உங்க உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது"
சச்சின், "அப்படின்னா என்னை ரிடையர் ஆகச் சொல்றீங்களா? நான் இன்னும் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு"
விவேக்,"இன்னும் சாதிக்கணுமா? உங்கள் சாதனை எங்களுக்கெல்லாம் ஒரு சத்திய சோதனை ஐயா"
சந்தானம், "ஆமாங்க, நீங்க நூறாவது செஞ்சுரி எப்போ அடிப்பீங்க அடிப்பீங்கன்னு காத்திருந்ததுக்குப் பதிலா பிகருக்காகக் காத்திருந்தா இந்நேரம் நாலு பிகர் கரெக்ட் ஆயிருக்கும்"
சிம்பு, "தலை, நீங்க கோச்சுக்காதீங்க. சில்லரைப் பசங்க இப்படித்தான் பேசுவாங்க. தனுஷ் உங்களுக்காக ஒரு பாட்டு போட்ட மாதிரி நானும் எங்கப்பாவும் சேர்ந்து ஒரு பாட்டு உங்களுக்காக போட்டுடறோம்"
சச்சின், "என்னது நீயும் உங்கப்பாவுமா? நான் கிரிக்கெட்டே ஆடலை, ஆளை விடுங்க" என்று தலை தெறிக்க ஓடுகிறார்.
சந்தானம், "என்ன மச்சான், பிட்ச்ல கூட இவ்ளோ பாஸ்டா ஓடியிருக்க மாட்டார் போல. உங்கப்பான்னா இப்படி டெர்ரர் ஆகி ஓடறாரு!"
விவேக், "அட அவரை விடுங்கப்பா, அங்க பாருங்க, சாராய ஊறலும் பெட்ரோல் பேரலும் பேசிக்கிட்டிருக்கு" - மல்லையாவும், முகேஷும் அங்கே பேசிக் கொண்டிருக்கின்றனர்.
சந்தானம், "என்ன இந்த ஆளு ஏர்லைன்சை அம்பானி கிட்ட விக்கப் போறானா?" எல்லோரும் அவர்களை நோக்கிச் செல்கின்றனர்.
கவுண்டர், "என்ன பிச்சாதிபதியும் லட்சாதிபதியும் கூடிக் கூடி பேசறீங்க?"
மல்லையா, "சும்மா பேசிக்கிட்டிருந்தோம்"
சந்தானம், "அப்போ நாங்க எல்லாம் என்ன சொமந்துகிட்டா பேசறோம்?"
முகேஷ், "யாருப்பா நீ? கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம பேசறே?"
சிம்பு, "ஹெலோ, எங்களை மாதிரி லோ கிளாஸைப் பார்த்தா உங்களுக்கெல்லாம் எரியுதுல்ல? நீயெல்லாம் நிலத்துலேர்ந்து பெட்ரோல் எடுத்து பத்த வெச்சாத்தான் பத்திக்கும். நான் எல்லாம் பார்த்தாலே பத்திக்கும்"
முகேஷ், "யாரு இந்தப் பையன்? சம்பந்தமே இல்லாம டயலாக் பேசறான்?"
சந்தானம், "இதென்ன பிரமாதம், இவங்கப்பா TR பாடினாலே பத்திக்கும்"
முகேஷ் கலவரமாகி, " அவனா நீ?" என்று ஓட்டம் எடுக்கிறார்.
கவுண்டர், "என்னப்பா இது, உங்கப்பா பேச்சை எடுத்தாலே அவனவன் தலை தெறிக்க ஓடறான்"
அப்பொழுது மல்லையாவின் உதவியாளர் ஓடி வருகிறார். "ஐயா, கிடைச்சிடுச்சுய்யா, கிடைச்சிடுச்சு"
சந்தானம், "என்ன கிடைச்சிடுச்சு? காணாம போன சொம்பா?"
உதவியாளர், "இல்லீங்க, நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சில பங்கு பெறுவதற்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு"
விவேக், "ஏன் சார், எதாச்சும் ஸ்பெஷல் எபிசோடா? புத்தாண்டு ஸ்பெஷலா?"
மல்லையா, "அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா, கடன் தொல்லை, ஊழியர்களுக்கு சம்பளம் குடுக்கணும். அதான் இந்த நிகழ்ச்சில கலந்துகிட்டு அதுல வர்ற பரிசுத் தொகையை வெச்சு எதாச்சும் சமாளிக்க முடியுமான்னு பார்க்கறேன்"
விவேக், "பார்த்து சார், அப்புறம் சம்பளம் குடுக்கலேன்னு சொல்லிட்டு உங்க ராயல் சாலன்ஜெர்ஸ் ஆளுங்க விளையாடமாட்டேன்னு ஸ்ட்ரைக் பண்ணப் போறாங்க."
சிம்பு, "கவர்மென்ட் கிட்டேர்ந்து கோடி கோடியா வாங்கி கேடித்தனம் பண்ணிட்டு இப்போ கோடீஸ்வரன் நிகழ்ச்சியில கலந்துக்கப் போறீங்களா? உங்களை மாதிரி அதிகார வர்க்கத்துக்கு சவுக்கடி குடுக்கற மாதிரி கூடிய சீக்கிரம் ஒரு கதை ரெடி பண்றேன்
சந்தானம், "முதல்ல ரிடர்ன் போறதுக்கு ஆட்டோ காசு ரெடி பண்ணு. பைக் வேற இல்ல"
கவுண்டர், "டேய் தாடி, நான் பரவால்லடா, நீ ரொம்ப காஞ்சு போய் இருக்கே"
சந்தானம், " உனக்காகத் தானே தமிழ்நாடு முழுக்க நாங்கள்லாம் ஓவர்டைம் பண்ணி குடிக்கறோம். அப்படியுமா உனக்கு காசு வரல?"
விவேக், " ஏன் சார், நாங்க தான் வறுமையின் நிறம் சிகப்புன்னு முப்பது வருஷத்துக்கு முன்னாடியே சொல்லியிருக்கோமே? அப்படியிருந்தும் உங்க கம்பெனிக்கு ஏன் சிகப்புக் கலர் வெச்சீங்க? இதுக்கு இன்னொண்ணு பண்ணுங்களேன், சன் டிவில முதல்லயே ஒரு கோடியை கையில குடுத்துடறாங்களே, அதுல கலந்துக்கோங்களேன்?"
மல்லையா, "அப்படியா? மேனேஜர், உடனே சன் டிவிக்கு ஒரு போன் போடு. அப்படியே கலாநிதி கிட்ட ஒரு அப்பாயின்ட்மென்ட் வாங்கிடு"
மல்லையாவும் போன பிறகு வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று தேடியவாறே முன்னே செல்கின்றனர். அப்பொழுது சந்தானம் எதன் மீதோ மோதி கீழே விழுகிறார். வாயிலிருந்து ரத்தம் வருகிறது. கடுப்புடன், "யார்ரா அவன் பீரோவை நடு ஹால்ல வெச்சிருக்கறது?"
"பீரோ இல்லை தம்பி, ஹீரோ" - நிமிர்ந்து பார்த்தால் சல்மான் கான்.
சிம்பு ஆவேசமாக, "டேய் சல்லு, உன் உடம்போ பாறாங்கல்லு. உன் மேல மோதினதுல என் பிரெண்டுக்குப் போச்சு ரெண்டு பல்லு. இதுக்கு டாக்டர் போடுவான் பெரிய பில்லு. இதுக்கு ஒரு பதிலை சொல்லு"
சல்லு, "அர்ரே பாய், என்னமா பேசறே!, நீ கண்டிப்பா என்கூட அடுத்த படத்துல நடிக்கற. ஐ லைக் சவுத் இந்தியன்ஸ்"
விவேக், "ஏன் சார், எப்படி சார் உடம்பை இப்படி வெச்சிருக்கீங்க? பேசாம எந்திரனா நீங்களே நடிச்சிருக்கலாம் போல. அப்படியே மெஷின் மாதிரியே இருக்கீங்க. மேக் அப் செலவு மிச்சமாயிருக்கும்"
சல்லு வெட்கப்பட்டுக் கொண்டு சிரிக்கவும், சந்தானம் நக்கலாக, "யோவ், ரொம்ப பெருமைப் படாதே, லேபில் இல்லாத பழைய ஹார்லிக்ஸ் பாட்டில் மாதிரி உணர்ச்சியே இல்லாத மூஞ்சின்னு ஊமைக்குத்து குத்தறான் அந்த ஆளு". சல்லு கடுப்பாகி நகர்கிறார்.
இவர்களையே வெகு நேரம் நோட்டமிட்ட ஸ்ரீனிவாசன், "ஏம்பா, உங்களுக்கெல்லாம் அழைப்பிதழே குடுக்கலியே, எப்படி உள்ள வந்தீங்க?"
விவேக், "என்ன சீனு, நம்ம வீட்டு விழாவுக்கு எதுக்கு அழைப்பிதழ்? "
ஸ்ரீனி, "என்னது? நம்ம வீட்டு விழாவா? இங்க என்ன காது குத்தா நடக்குது? மினிமம் டிக்கெட் 1500 ரூபாய். நானே எப்படி வசூல் பண்றதுன்னு யோசிச்சு மண்டை குழம்பியிருக்கேன். இதுல நீங்க வேற ஓசி கிராக்கி"
சந்தானம், "காது தான்யா குத்தறீங்க. தமிழ்நாட்டுல கரெண்டே இல்லை. உங்களுக்கு ராத்திரி எட்டு மணிக்கு மேல கிரிக்கெட் கேட்குதா?
ஸ்ரீனி, "ஹெலோ, நாங்க ஜெனரேட்டர்ல விளையாடறோம்"
சந்தானம், "அதுக்கு அரசாங்கம் மானியம் தருதே, அதையும் உஷார் பண்ணியிருப்பீங்களே?"
ஸ்ரீனி தடுமாற்றத்துடன், "அது அவங்க எங்களுக்குத் தர்ற ஊக்கத் தொகை"
விவேக், "அடப்பாவிகளா. யோவ், இங்க ஜெனரேட்டர்ல வர்ற பவரை ஊர்ப் பக்கம் திருப்பிவிட்டா ஒரு மாசத்துக்கு நம்ம ஊர் ஹாஸ்பிடல்களுக்கு மின்சாரம் கிடைக்குமேய்யா"
ஸ்ரீனி, "எல்லாம் அம்மா கிட்ட பேசி பெர்மிஷன் வாங்கிட்டுத் தான் விளையாடறோம். ஏற்கனவே ஊர்ப்பட்ட டாக்ஸ் போட்டு வர்றதுல பாதியை புடுங்கிடறாங்க. இதுல நீங்க வேற கடுப்பேத்தாதீங்கப்பா" என்று திட்டிவிட்டு போகிறார்.
விவேக், "ச்சே, அமித்ஜியை காணுமே? குரோர்பதி மாதிரி அவர்கிட்ட நாலு கேள்வி கேட்டு கலாய்க்கலாம்னு நினைச்சேனே?". சற்று தூரத்தில் பிரியங்காவும் கரீனாவும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்களிடம் செல்கின்றனர்.
கவுண்டர், "ஏனுங்க அம்மணி, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அங்க கயித்துல தொங்கினது யாருங்க? நீங்க தானா?"
பிரியங்கா பெருமையாக, "யெஸ், நான் தான் அது. புடிச்சுதா?"
கவுண்டர், "என்ன மேடம் நீங்க? டான்ஸ் ஆட சொன்னா கூத்தாடி வேலையெல்லாம் பண்றீங்க? எங்க ஊர்ல பத்து ரூபாய் குடுத்தா தம்மாத்தூண்டு பையன் எதையும் புடிக்காம கயித்து மேல நடப்பான்"
பிரியங்கா, "நான் டான்ஸ் ஆட வரலை. பெர்பார்மன்ஸ் பண்ண வந்தேன்"
விவேக், "எது? கயித்துல தொங்கறதா?"
சந்தானம், "அதை விடுங்க, உங்க டிரஸ் ரொம்ப புடிக்குது மேடம்"
"தேங்க்ஸ்"
விவேக், "அதாவது உங்க டிரஸ் உங்க உடம்பை ரொம்பப் புடிக்குதுன்னு சொல்றான். பாவம் நீங்க, ஆடி முடிக்கறதுக்குள்ள மூச்சு வாங்கி நுரை தப்பிடுச்சே!" பிரியங்கா வெறுப்புடன் செல்கிறார்.
யாரும் தன்னைக் கவனிக்காததைக் கண்டு கரீனா வேண்டுமென்றே நுழைகிறார், "ஹாய் பிரெண்ட்ஸ், எப்டி இருக்கீங்க?" ஐ லைக் சென்னை, ஐ லைக் சாம்பார்,"
சந்தானம், " பட் வீ லைக் சுண்டகஞ்சி, வெரி ஹெல்தி டிரிங்"
கவுண்டர், "தம்பிங்களா, நீங்க இதை ஓட்டுங்க, நான் அப்படி ஒரு ஓரமா போய் யாரோ சீர் லீடராமே, அவங்களைப் பார்த்துட்டு வர்றேன்" என்று கூறிய படி எஸ்கேப் ஆகிறார்.
கரீனா, "பிரெண்ட்ஸ், நீங்க ஏஜென்ட் வினோத் படம் பார்த்தீங்களா? ஹாலிவுட் படம் மாதிரி இருக்குல்ல?"
விவேக், "எவ்வளவு தான் காய்கறிகளைப் போட்டாலும் மேகி என்னிக்குமே ஜங் புட் தான். அது மாதிரி என்னதான் வெளிநாட்டுல ஷூட்டிங் நடத்தினாலும் அது இங்க்லீஷ் படம் ஆயிடாது மேடம்"
சந்தானம், "சரியான மொக்கைப் படம்னு சொல்றாரு"
விவேக், பய் தி பய், நீங்களும் சைபும் சேர்ந்து நடிச்ச எல்லாப் படமும் பிளாப். ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்ச சினிமாவே ஹிட் ஆகாத போது, உங்க வாழ்க்கை மட்டும் ஹிட் ஆவும்னு நம்பறீங்களா? நல்லா யோசிங்க - ஆஹா, இப்படியெல்லாம் கருத்து சொல்லி எவ்வளவு நாளாச்சு. இதே மூடுல நான் சமுதாயத்துக்கு நிறைய கருத்து சொல்ல வேண்டியிருக்கு வர்ர்ட்டா? போகும்போது சந்தானத்தைப் பார்த்து, "நான் சொன்ன ஒரு கருத்து இன்னும் கொஞ்ச நேரத்துல பலிக்கப் போவுது, பீ ரெடி" என்று சொல்லி டாட்டா காட்டிச் செல்கிறார்.
சிம்பு சந்தானத்திடம், "ச்சே, எப்படி இருக்காடா, நீ எனக்கு வேணும் கரீ, இப்பவே வேணும்"
சந்தானம்,, "இவன் திருந்தமாட்டான் போலிருக்கே, கொஞ்சம் பொறு, விண்ணைத் தாண்டி அவ வருவா சீனியர் கருத்து சொல்லி அவளை நல்லாக் குழப்பிட்டாரு, மச்சான், இதான் சரியான டைம். உன் மேட்டரை அவுத்து விடு"
இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்த சிம்பு, "ஒரு மாறுதலுக்கு நீங்க ஏன் தமிழ் சினிமாவுல நடிக்கக் கூடாது? நீங்க சரின்னு சொல்லுங்க, உங்களுக்காகவே ஒரு வயலன்டான லவ் ஸ்டோரி வெச்சிருக்கேன் - அரக்கன்னு பேரு"
கரீனா கிண்டலாக, "உன் கூடவா? நீ எனக்கு தம்பி மாதிரி இருக்கே"
சந்தானம், "உங்களுக்கு மேட்டரே தெரியல. தமிழ்நாட்டு ஜனங்க ஹீரோவோட உடம்பை பார்க்கவே மாட்டாங்க. அவன் எவ்ளோ கேவலமா இருந்தாலும் ஏத்துப்பாங்க. சிம்புவையே ஏத்துக்கிட்டாங்கன்னா பாருங்களேன்"
சிம்பு முறைக்கவும் சந்தானம், "சாரி பாஸ், ஒரு ப்ளோவுல வந்திடுச்சு"
கரீனா, 'நான் யோசிச்சு சொல்றேன், பை " என்று என்று புறப்பட எத்தனிக்கிறார்.
சிம்பு, "மேடம், யோசிக்காதீங்க. நல்ல டைட்டில். அரக்கன் - எ வயலன்ட் லவ்வர் அப்படின்னு கேப்ஷன் போட்டுடலாம்"
கரீனா, "ஹ்ம்ம், ஸ்டோரி சொல்ல முடியுமா?'
சிம்பு உற்சாகமாகி, "ஸ்டோரி என்னங்க, முழு ஸ்க்ரிப்டும் சொல்றேன். இதுக்காக மால்டீவ்ஸ்ல ரூம் கூட போட்டாச்சு"
கரீனா, "வாவ், மால்டீவ்ஸ். ஐ லைக் இட், வாங்க உடனே போவோம்" இருவரும் சிட்டாகப் பறக்கின்றனர்.
எதையோ மறந்தவராக மீண்டும் என்ட்ரீ ஆகும் விவேக், "என்ன கருத்து பலிச்சுதா?"
சந்தானம்,"பிகரைப் பார்த்தவுடன் பிரெண்டை கட் பண்றவன் தான் ஹீரோ - இதானே? ரொம்ப நல்லாப் பலிச்சுது. ஆனா ஒண்ணு நல்லாத் தெரிஞ்சிக்கிட்டேன், என்னதான் கிரிக்கெட் பெரிய பொழுதுபோக்கா இருந்தாலும் அதை ப்ரொமோட் பண்றதுக்கு சினிமாவும் சினிமாக் கலைஞர்களும் தான் தேவையா இருக்கு.
விவேக், "இல்லையா பின்னே? அகர வரிசைப்படி பார்த்தாலும் முதல்ல வர்றது CIN தானே, அப்புறம் தான் CRI வருது. வா அங்க பெரிசு ரொம்ப நேரமா அந்த வைட் லேடி முன்னாடி குத்த வெச்சு உக்காந்திருக்கு. அது பாடியாகறதுக்கு முன்னாடி அள்ளிப் போட்டுக்கிட்டு எதாச்சும் அரபாடி லாரில ஏறி வீடு போய்ச் சேருவோம்.”
இந்த ஆர்டிகிள் மூலமா நான் என்ன சொல்ல வர்றேன்னு யோசிக்கறீங்களா? ரொம்ப யோசிக்காதீங்க. IPL ஜாலிக்குத் தானே பார்க்கறீங்க. அதே மாதிரி இதையும் ஜாலியாப் படிங்க.
வாழ்க IPL , வளர்க இளம் வீரர்கள் - IPL முடிஞ்சதுக்கப்புறம் வழக்கம் போல IPLஐத் திட்டுவோம்.
Jayaraman
New Delhi