Wednesday, October 24, 2012

அர்விந்த் கெஜ்ரிவால் - நல்லவரா? கெட்டவரா?







மத்திய தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அரசு அதிகாரி. அரசு இயந்திரத்தில் நடக்கின்ற அநியாயங்களைத் தட்டிக் கேட்கிறார். ஆனால் அவரால் பெரிசா ஒண்ணும் செய்ய முடியலை. அதனால் அரசாங்க பதவியை விட்டுவிட்டு மக்களோடு சேர்ந்து போராட முடிவெடுத்து வெளியே வர்றார். அவருக்குத் துணையாக சம சிந்தனை உடைய நிறைய நல்லவங்களும் அந்தப் போராட்டத்தில் சேர்ந்துக்கறாங்க. மக்கள் குரல் எழுப்பினால் அரசாங்கம் கேட்டுத் தான் ஆகணும்னு நம்பி களம் இறங்கறார். போராட்டமும் பிரமாதமாக நடக்குது. ஆனால் பெரிசா வெற்றி ஒண்ணும் கிடைக்கலை. அதனால அரசியலுக்கு அரசியல் தான் பதில்னு முடிவு பண்ணி தனது பூப்பாதையிலிருந்து விலகி சிங்கப் பாதையில் பயணிக்கிறார். பல மந்திரிங்க மேல அடுக்கடுக்கா ஊழல் புகார்களை அடுக்கி தடாலடி அரசியல் பண்றார். இதான் சாக்குன்னு அரசாங்கம் அவரை பசுத்தோல் போர்த்திய புலின்னு வர்ணிக்கறாங்க. அவர் மேலேயும் அவரைச் சேர்ந்தவர்கள் மேலேயும் பல புகார்களையும், வழக்குகளையும் போடறாங்க. ஆனால் அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாம போற பாதை முக்கியம் இல்லை, போய்ச் சேர்ற இடம் கோவிலா இருக்கணும்னு தீர்மானம் பண்ணித் தன் பயணத்தைத் தொடர்கிறார்.

ஒரு மசாலா சினிமாவுக்குத் தேவையான அனைத்து சமாச்சாரங்களையும் தன்னுள் அடக்கி வைச்சிருக்கற அர்விந்த் கெஜ்ரிவால் பற்றிய சிறுகுறிப்பு தான் மேலே சொன்னது. கண்டிப்பா இதை யாராச்சும் சினிமாவா எடுக்கத் தான் போறாங்க. நாம இப்பவே எடுப்போம்:


சூர்யா:

கிட்டத்தட்ட சிங்கம் மூன்றாம் பாகமாவே எடுக்கலாம். முதல் பாதியில சாந்தமா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடறார். ஆனால் அந்தப் போராட்டத்தின் போது அன்னா ஹசாரேவை (நாட்டாமை விஜய குமார் இல்லேன்னா அவங்கப்பா சிவகுமாரைப் போட்டுக்கலாம்) அரிவாளால் வெட்டிடறாங்க. உடனே அங்கேர்ந்து டாட்டா சுமோவில் பறந்து பறந்து எல்லாருக்கும் செக் வைக்கிறார். கடைசியில் அவர் சொன்ன கோரிக்கையை அரசாங்கம் ஏத்துக்குது. சூர்யா IG ஆயிடறார்.

விக்ரம்:

இந்தக் கதை இவருக்கொன்றும் புதுசில்லை. இருந்தாலும் எதாவது வித்யாசமா பண்ணி அசத்துவார். முதல் பாதியில் பேசிப்பேசி பொதுமக்களுக்கு உணர்ச்சியூட்டறார். அதனால வில்லன் கோஷ்டி இவர் நாக்கை அறுத்து ஊமையாக்கிடறாங்க (விக்ரம் இன்னும் ஊமை வேஷம் போடலை, புதுசா இருக்கும்). அதிலேர்ந்து எப்படி ரைஸ் ஆவுறார்னு மீதிக் கதை போகுது. தமிழ் சினிமாவில் முதல் முறையா சைகை மொழியில் பன்ச் டயலாக் அடிக்கப் போற பெருமை விக்ரமைத் தான் சேரும்.

விஜய்:

இவர் ஸ்டைல் வேற. உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிற இடத்துக்கு வர்ற பொது மக்களுக்கு இலவச தண்ணீர் விநியோகம் பண்ற ஒரு சாதாரண ஆள் தான் விஜய். ஆனால் போராட்டக் கமிட்டிக்குள்ளேயே பல கோல்மால் நடக்கறது தெரிய வருது. ஸோ, அந்த புல்லுருவிகளை மக்கள் முன்னாடி வெளிச்சம் போட்டுக் காட்டறதுக்குப் புறப்படறார். போராட்டக் கமிட்டித் தலைவர் பொண்ணுக்கு இவர் மேல காதல் வேற வந்துடுது. "நீ தாம்பா என்னிக்குமே நிரந்தரத் தலைவன்" அப்படின்னு ஓய்வு பெற்ற கரை வேட்டி நடிகர்களை விட்டு க்ளோசப்பில் வசனம் பேச வைக்கணும். அப்போ தான் அரசியல் ரூட்டுக்கு சரியா வரும்.

சிம்பு / விஷால்:

இவங்க இன்னும் கொஞ்சம் வித்யாசமானவங்க. உண்ணாவிரதப் போராட்டத்தில் இவரைக் காணோமேன்னு எல்லாரும் தேடிக்கிட்டிருக்கும்போது திடீர்னு பூமியிலேர்ந்து 60 அடிக்கு எகிறி டைவ் அடிச்சு லான்ட் ஆவாங்க. அங்கேயே ஒரு வீரமான குத்துப் பாட்டும் போடுவாங்க. தங்கள் போராட்டத்துக்கு அரசாங்கம் செவி சாய்க்கலைன்னு தெரிஞ்ச உடனே அரசு அதிகாரிங்க சாப்பாட்டுல வாந்தி வர்ற மருந்தைக் கலந்துடுவாங்க. அதாவது பசிக்கும், ஆனால் அவங்களால சாப்பிட முடியாது. அப்படியொரு நரக வேதனை அனுபவிப்பாங்க. மூணு வகையான ஹீரோயின் கண்டிப்பா இருப்பாங்க. "காந்தி சொன்னது சாந்தி ரூட், ஆனா நான் கண்டுபிடிச்சது வாந்தி ரூட்" இது தான் படத்தோட மெய்ன் பன்ச்.

லோ பட்ஜெட் கிராமத்து ஸ்டைல்:

அதே ஜாதி வெறி பிடிச்ச காதல் கதை தான். பொண்ணு வீட்டுக்கு எதிர்லயே கூடாரம் போட்டு உண்ணாவிரதம் இருக்காரு ஹீரோ. ஹீரோயின் வீட்டுக்குள்ளேயே உண்ணா விரதம் இருக்காங்க. ஹீரோயினோட அப்பா என்னல்லாமோ பண்ணிப் பார்க்கறாரு, அவரால ஒரு ஆணியும் புடுங்க முடியலை. கடைசியில இன்னொரு பையனோட ஹீரோயினுக்குக் கல்யாணமும் பிக்ஸ் பண்றாங்க. நம்ம காதலைப் புரிஞ்சுக்காம ஜாதி வெறி பிடிச்சு அலையற இந்த ஆளுங்க யாருமே உயிரோட இருக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணி கல்யாண சாப்பாட்டுல விஷத்தைக் கலந்துடறாங்க. ஊரே சுடுகாடா மாறிடுது (அதிரடியான க்ளைமேக்ஸ்னு பேட்டி குடுக்க வசதியா இருக்கும்).ராமாநாதபுரம் பக்கத்துல நடந்த உண்மைக் கதைன்னு எக்ஸ்ட்ராவா ஒரு பிட்டைப் போட்டுக்கலாம் (யார் போய் பார்க்கப் போறாங்க?)

காமெடி ரூட்:

இது இயக்குனர் ராஜேஷ் மற்றும் நடிகர் தனுஷ் ஸ்டைல். ஹீரோயின் தன்னை விரும்பலைன்னு சொன்னதால அவர் வீட்டு முன்னாடி உண்ணாவிரதப் போராட்டம் இருக்கார் ஹீரோ (ஜீவா இல்லேன்னா தனுஷ்). அவருக்குத் துணையா அன்னா ஹசாரே கேரக்டர்ல சந்தானம் இல்லேன்னா விவேக் வர்றாங்க (அப்போ தான் நிறைய கருத்து சொல்ல முடியும்). எப்படி கெஜ்ரிவால் ஹசாரேவைக் கழட்டி விட்டுட்டாரோ, அது மாதிரி ஹீரோக்களும் இந்தக் காமெடியன்களை கழட்டி விட்டுடுவாங்க. "பசும்பால் பசுவிலேர்ந்து வருது, அப்போ லோக்பால் லோக்கிலேர்ந்து வருதா?", "திருவள்ளுவர் மூன்று பால் பத்தி எழுதியிருக்காரு, ஆனா இந்தப் பாலைப் பத்தி ஒண்ணும் சொல்லலையே, ஒரு வேளை அவுட் ஆப் சிலபசா இருக்குமோ?" - இப்படி மொக்கை வரிகள் படம் முழுக்க வருது. அனேகமா இந்தக் கதை தான் உண்மை நிகழ்வுகளோட மிகச் சரியா பொருந்துது.

மற்றவர்களைப் போல் அவரும் ஒரு மலிந்த அரசியல்வாதி, அன்னா ஹசாரேவைக் கழட்டிவிட்ட நம்பிக்கைத் துரோகி, அவரோட இயக்கத்திற்கு வெளி நாட்டிலிருந்து கள்ளப் பணம் வருகிறதுன்னு அவர் மேல் பல குற்றச் சாட்டுகள் இருந்தாலும் அவரோட நடவடிக்கைகள் குறைந்த பட்சம் அவரை ஒரு மாற்று அரசியல்வாதியாக் காட்டுது. அதுவே இன்றைய தேதியில் நாட்டுக்கு நடக்கற மிகப் பெரிய நன்மை.

Jayaraman
New Delhi








No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...