Saturday, October 27, 2012

சூரிய கிரிக்கெட்



சன் குழுமம் டெக்கான் அணியை வாங்கியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. மாறனின் இந்த மூவ் என்ன மாதிரியான பக்க விளைவுகளை ஏற்படுத்தும்னு யோசிச்ச போது:

ஐயா குடும்பத்தினர் எது செஞ்சாலும் அம்மாவும் ஏட்டிக்குப் போட்டியா எதாச்சும் செய்வாங்க. அம்மாவோ பெங்களூரைச் சேர்ந்தவங்க. மால்யா நிலைமையும் கவலைக்கிடமா இருக்கறதால பெங்களுரு அணியை அம்மா வாங்கறதுக்கு வாய்ப்புகள் அதிகம். இதன் மூலம் தமிழனின் ஆதிக்கம் கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் தீ போலப் பரவும் (ஆனா காவிரியிலும் கிருஷ்ணாவிலும் தண்ணீர் மட்டும் வராது)

அம்மா கிரிக்கெட்ல புகுந்தா மம்தா அக்கா சும்மா இருப்பாங்களா? அவங்க ஷாருக்கிட்டேர்ந்து நைட் ரைடர்சை வாங்கிடுவாங்க. அக்காவே கிரிக்கெட் அணி வாங்கும்போது சோனியா அன்னையும் ஒரு அணியை வாங்குவாங்க (அனேகமா டெல்லி). அக்காவும் அன்னையும் டீம் வாங்கும்போது அண்ணன் சரத் பவாரும் தன் பங்குக்கு பூனே அணியை வாங்கிடுவாரு. அண்ணனும் அன்னையும் வாங்கினா உடனே அவங்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட விரோதி பிஜேபி ராஜஸ்தானை வாங்கிடும். பிஜேபி வாங்கினா உடன் பிறவாத் தம்பி ஷிவ் சேனாவுக்குப் பொறுக்காது. அவங்க மும்பை அணியை வாங்கிடுவாங்க. அரசியல் கட்சிகளுக்குத் தோதாக மற்ற டிவி சேனல்களான ஜீ, சோனி மற்றும் ஸ்டார் ஆகியோரும் களம் இறங்குவர். மிச்சம் அனாதையா இருக்கறது சென்னையும் பஞ்சாபும் தான். அவங்க சீசனுக்கு ஏற்ற மாதிரி யார் கூடவாவது கூட்டணி வைச்சுக்க வேண்டியது தான். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா இந்தியன் பிரீமியர் லீக் பொலிடிகல் லீகா மாறிடும்.

முரசொலியில் கலைஞர் இனிமேல் கிரிக்கெட் விமர்சனக் கட்டுரைகள் எழுதுவார். சாம்பிளுக்கு: தம்பி சங்கக்கரா கையிலிருக்கும் மட்டை அண்ணா கையில் இருக்கும் எழுதுகோல் போன்று எதிரிகளை சரமாரியாக சதிராடியது. ஸ்டெய்ன் வீசிய பந்து மிசா சட்டத்தை விட வேகமாகப் பாய்ந்து வந்து விக்கெட்டைத் தாக்கியது என்றால் அது மிகையாகாது. சங்கக்கரா முதல் ஸ்டெய்ன் வரை எல்லோரும் அவரின் உடன்பிறப்புகள் ஆகிவிடுவர். 

சன் டிவியின் பண்டிகை சிறப்பு பட்டி மன்றங்களின் தலைப்பு இனி கிரிக்கெட்டை ஒட்டியே இருக்கும். மிகவும் வெற்றியைத் தேடிக் கொடுப்பது வேகப்பந்து வீச்சா அல்லது சுழற் பந்து வீச்சா, அடித்து ஆடுவது நல்லதா அல்லது நின்று ஆடுவது நல்லதா - இது மாதிரி தலைப்புகளில் ராஜாவும் பாரதி பாஸ்கரும் ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொள்வார்கள்.

அணியின் புதிய யூனிபார்ம் கோல்டன் ஆரஞ்சு கலர்ல இருக்கும். நடுவுல சன்  லோகோ. அணிக்கு ரைசிங் சன்ஸ், சன்ரைசர்ஸ், டெக்கான் திராவிடாஸ் அல்லது சதர்ன் ஸ்பைசர்ஸ் இந்த மாதிரி பெயர் வைக்கலாம் ("பெயரில் "சன்" வரும்படி டீமுக்குப் பெயர் சொல்லுங்கன்னு இப்பவே SMS கான்டெஸ்ட் நடத்தறாங்க. நாமளும் நம்ம பங்குக்கு சன் ரேஞ்சர்ஸ்னு  பேர் வெச்சு லோகோவும் போட்டுட்டோம்ல)

அணியின் தாரக மந்திரம் அல்லது டேக் லைன் - கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. 

அணியின் புதிய யூனிபார்ம் கரு நீலச் சட்டை, கறுப்பு-சிவப்புக் கரை வேட்டி மற்றும் வெள்ளை மேல் துண்டு. ஸ்ரீனிவாசனிடம் பேசி IPL ஆடைகளுக்கான விதிமுறைகள் மாற்றியமைக்கப்படும். அப்படி முடியாத பட்சத்தில் கறுப்பு பேன்ட் மற்றும் சிவப்பு சட்டை அணிய வேண்டும்.

சன் டிவி "சின்னத்திரை கிரிக்கெட் போட்டி" நடத்துவாங்க. சன் டிவியின் சீரியல் குடும்பத்தினருக்கான கிரிக்கெட் டோர்னமென்ட் இது. செல்வம் முதல் செல்லம்மா வரை எல்லாரும் கிரிக்கெட் ஆடுவாங்க.

டக் அவுட்டில் உட்கார்ந்திருக்கும்போது எல்லா வீரர்களும் கட்டாயம் கையில் தினகரன் நாளிதழ் வைத்திருக்க வேண்டும்.

எல்லோருக்கும் கட்டாயம் அடைமொழி கொடுக்கப்படும். சரவெடி ஸ்டெய்ன், தடாலடி டுமினி, சேனாபதி சங்கக்ககரா....

பார்த்திவ் படேல் இனிமே அவ்ளோ தான். பின்னே? மோடி மாநிலத்தைச் சேர்ந்தவராச்சே! மதச்சார்பற்ற மாநிலங்களிலேர்ந்து வர்ற வீரர்களுக்கு மட்டும் தான் அணியில் இடம் கிடைக்கும்.

அணியில் இருக்கும் யாருக்கும் திமுகவிற்கு வேண்டப்படாத கட்சிகளோட எந்த விதத் தொடர்பும் இருக்கக் கூடாது. ஆனால் ஐயா கூட்டணி மாறினால் அவர்களும் மாறிவிட வேண்டும்.

ஜாதி அடிப்படையில் தான் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு 69% இட ஒதுக்கீடு உண்டு. பிராமணர்கள் மற்றும் பண்டித வகுப்பைச் சேர்ந்த மிஸ்ரா வகையறாக்கள் வேறு இடம் பார்ப்பது நல்லது. கேமரூன் வைட்டுக்கும் கம்யூனிடி சான்றிதழ் அவசியம். அவரால ஏற்பாடு பண்ண முடியலேன்னா நாங்களே வாங்கித் தருவோம். அதற்கான கட்டணம் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும்.

"நாங்கள் கொண்டாடிய தீபாவளி" - சங்கக்கராவும் ஸ்டெயினும் பங்கு பெறும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி (அதாவது சங்கக்கரா கொழும்புவில் பற்ற வைக்கிற ராக்கெட் சென்னை வழியா  ென்னாப்பிரிக்காவில் இருக்கற ஸ்டெய்ன் வீட்டில் போய் எப்படி வெடிக்குதுன்னு காட்டறோம்)

இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் எது வந்தாலும் திமுக சார்பாக வீரர்கள் பிரசாரம் செய்ய அழைக்கப்படுவார்கள். ஆங்காங்கே ஸ்பெஷல் கிரிக்கெட் டோர்னமென்ட் நடத்தி அதன் மூலம் கூட்டம் சேர்ப்பார்கள்.

இனிமேல் strategic டைம் அவுட்டில் விளம்பரமெல்லாம் கிடையாது. முக்கியமான சீரியல்களின் சிறிய தொகுப்பு காண்பிக்கப்படும். அப்பொழுது தான் குடும்பத்துடன் மேட்ச் பார்க்க வந்திருக்கும் தாய்மார்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

வீரர்களின் சம்பள முறைகள் மாற்றியமைக்கப்படும். மொத்த சம்பளத்தில் 30% தான் கேஷ், மீதிப்பணம் ஸ்பைஸ் ஜெட்டின் விமானப் பயணக் கூப்பன்கள், தினகரன் மற்றும் சன் டைரக்ட் பத்து வருட சந்தாவாகக் கொடுத்து அட்ஜஸ்ட் செய்யப்படும். விருப்பம் உள்ளவர்கள் சன் மியூசிக்கில் தொகுப்பாளர்களாகப் பணியாற்றியும் பணம் பெற்றுக் கொள்ளலாம்.

சன் நிறுவனம் எதாவது திரைப்படத்தை வாங்கினால் அதன் இசை வெளியீட்டு விழா முதல் வெள்ளி விழா வரை அனைத்து வீரர்களும் கட்டாயம் பங்கு பெற வேண்டும். அந்தப் படத்தின் பாடல்களுக்கு வீரர்கள் மேடையில் நடனம் ஆடுவர்.

மேட்சில் எந்த வீரராவது சொதப்பினால் அவர் ஒரு மணி நேரம் சன் டைரக்டின் கால் சென்டரில் உட்கார்ந்து வாடிக்கையாளர்கள் போனில் காறித் துப்புவதை வாங்கிக் கொள்ள வேண்டும். இல்லையேல் சூரியன் FMல் மூன்று மணி நேரம் வாய் கிழியப் பேச வேண்டும். இதற்கு பயந்தே அவர்கள் நன்றாக விளையாடுவார்கள்.

Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...