எவனாச்சும் ஒரு அடிமை சிக்கினான்னா அவனுக்கு அறிவுரை சொல்லியே கொல்றது நம்ம கலாசாரம். அதிலயும் தோனி மாதிரி மிகவும் நொந்து போயிருக்கற ஆளுங்களை நோண்டறதுன்னா பேரானந்தம். இன்றைய தேதியில் நமக்கு சிக்கியிருக்கும் அடிமை அண்ணன் ராஞ்சியார் தான். அவருக்கு யாரெல்லாம் அட்வைஸ் மற்றும் ஆறுதல் மழை பொழியறாங்கன்னு பார்ப்போம்:
நிரந்தர கேப்டன் விஜயகாந்த்:
தம்பி, முதல்ல நல்ல கருப்பு கண்ணாடி வாங்கி மாட்டிக்க. அது தான் சென்டிமென்ட். அப்புறம் எப்பவுமே பக்கத்துல மச்சானும் மனைவியும் இருக்கணும். ஏன்னா அப்போத்தான் நாம தடுமாறும் போது அவங்க நம்மளை தாங்குவாங்க. சம்பந்தம் இருக்கோ இல்லையோ, புள்ளி விவரம் நல்ல தெரிஞ்சிருக்கணும். அப்புறம் எப்பவுமே நடு வேனுக்குள்ள ஓட்டை போட்டு அதுல தான் நிக்கணும். அப்போ தான் வெளிய இருந்து பார்க்கறவங்களுக்கு நாம ஸ்டெடியா நிக்கறோம்னு தெரியும்....(திடீரென்று ஏதோ நினைவுக்கு வந்தவராக) அடேடே, நீங்க நல்ல கேப்டனா இருக்கறது எப்படின்னு கேட்டீங்கல்ல? நான் பாட்டுக்கு ஏதோதோ சொல்றேன் பாருங்க, நீங்க எதுக்கும் போயிட்டு நாளைக்கு காலையில வாங்க. (பிறகு மச்சானைப் பார்த்து) இனிமே ஆறு மணிக்கு மேல வெளியாள் யாரோடவும் மீட்டிங் போடாதீங்கப்பா!
கலைஞர்:
தம்பி தோனிக்கு, தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் உன் நிலைமை எனக்குப் புரிகிறது. தோல்வியின் வலி சிறியது. ஆனால் அதன் பின் வரும் வெற்றியோ மிகப் பெரியது. இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைவனாக இருப்பதும், கட்சிக்கு தலைவனாக இருப்பதும் என்னைப் பொறுத்தவரை ஒன்று தான். இளையவர்களிடம் வீரம் இருக்கும். மூத்தவர்களிடம் விவேகம் இருக்கும். இரண்டும் இரண்டறக் கலந்தால் தான் உனக்கு வெற்றி. அதற்கு மாறாக பதவி விலகுவதில் எந்தப் பயனும் இல்லை. புறமுதுகிட்டு ஓடுபவனை புறநானூறு கூட மன்னிக்காது. மூத்தவர்களை அனுசரித்தும், இளையவர்களை அரவணைத்தும் செல். அந்த அண்ணா எனக்கு வழி காட்டினார். இந்த அண்ணா உனக்கு வழி காட்டுகிறேன். வெற்றி உனதே!
சூர்யா:
நாம திமிரோடு இருக்கலாம். ஆனா மத்தவங்களுக்கு அது தெரியக் கூடாது. இனிமே மேட்ச் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி பிட்சில ஆடியன்ஸ் முன்னாடி விழுந்து நமஸ்காரம் பண்ணிடுங்க. மத்தபடி மூணு மாசத்துக்கு ஒரு தடவை கெட்டப் மாத்தறீங்க, காமெராவுக்கு முன்னாடி நல்லா நடிக்கறீங்க, எல்லாம் ஓகே.
சூப்பர் ஸ்டார்:
உன் வாழ்கை உன் கையில்னு சொன்னேன். ஆனா இப்போ உங்க வாழ்க்கை அந்த ஆண்டவன் கையில் தான் இருக்கு. பணமும் புகழும் இருமல் தும்மல் மாதிரி. வந்தாலும் ஏன்னு கேட்க முடியாது. போனாலும் தடுக்க முடியாது. இமயமலைக்கு வந்து பாபாஜி குகையை ஒரு தடவை தரிசனம் பண்ணுங்க. நல்லது நடக்கும்.
விவேக்:
நாட்டுக்காக எவ்வளவோ வெற்றிகளை தேடிக் கொடுத்த உங்களை எப்படி கீழே போட்டு மிதிக்கறாங்க பார்த்தீங்களா? வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இது தோனி டா! (சேம்பியன்ஸ் லீகுக்கு முன்னாடி விளம்பரப் படத்தில் நடிக்கறதுக்காகத் தான் இலங்கையிலிருந்து சீக்கிரம் திரும்பிட்டீங்களாமே? உண்மையாவா? )
டி ஆர்:
தில்லிருந்தா அரசியலில் குதித்து விளையாடு, ஆனால் விளையாட்டில் அரசியல் பண்ணாதே.
டேய் தோனி, உன் சரக்கு ஆகாது போணி.
வீருவும் கம்பீரும் உன் நடு மண்டையில் அடிக்கறாங்க ஆணியை, உடனடியா நீ மாத்தியாகணும் உன் பாணியை. அதுக்கு நீ பார்க்க வேண்டியது என்னை மாதிரி ஒரு அஷ்டாவதானியை. அப்போ தான் உனக்குப் பிறக்கும் விடிவு. உன் பிரச்சினைக்குக் கிடைக்கும் முடிவு. உன் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு வடிவு.
விஜய்:
நீ ஹெலிகாப்டர் ஷாட் அடிச்சா பந்து தான் பறக்கும். ஆனா வீரு அடிச்சா அந்த ஹெலிகாப்டரே பறக்கும். ஆண்டவன் எல்லாருக்கும் வேற வேற திறமையை குடுத்திருக்கான். அதையெல்லாம் ஒண்ணா சேர்க்கறது தான் ஒரு கேப்டனோட வேலை. நீ அதை விட்டுட்டு சகுனி வேலையெல்லாம் பார்த்தா இப்படித்தான் ஆகும். கடைசியா ஒண்ணு சொல்றேன், கூடிய சீக்கிரம் உன் மட்டையும் மூளையும் மைதானத்தில் பேசணும், இல்லேன்னா எங்க "துப்பாக்கி" பேசும் டோய்.
சந்தானம்:
இண்டிகோ மாதிரி சல்லுன்னு போய்க்கிட்டிருந்த உங்க கிரிக்கெட் வாழ்க்கை இப்போ கிங்க்பிஷர் மாதிரி தரையிறங்கிடுச்சே! இனிமேலாச்சும் வீரு மாதிரி அப்பாட்டக்கர் ஆளுங்களை அக்காத்துக்கா மாதிரி நடத்தாதீங்க. அப்புறம் உங்களை அனாமத்தாக்கி அன்னக்காவடி எடுக்க வைச்சுடுவாங்க.
வைரமுத்து:
நீ அடித்தவுடன் பறப்பதற்கு வீருவும் கம்பீரும் வெறும் காற்றடைத்த பந்தல்ல. அவர்கள் தீப்பந்தம். தீயை விட்டுவிட்டு அவர்களுடன் பந்தமாகிக் கொள். அவர்களை உன் சொந்தமாக்கிக் கொள். அப்பொழுது தான் உன் கரிசல் காட்டுக் கிரிக்கெட்டில் கன மழை பெய்யும். உன் கந்தர்வ வாழ்வு உய்யும்.
ஜோதிடர் காழியூர் நாராயணன்:
பொதுவா ஜாதகத்தில் அஷ்டம சனி, பொங்கு சனி, ஏழரை சனி இருக்கறது வழக்கம். ஆனால் உங்க ஜாதகத்தில் மினி திருநள்ளாறே குடியிருக்கே? பீர் போடறதை நிறுத்திட்டு சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்ச்சு நீராடுங்க. சனி போகுதோ இல்லையோ, தொப்பை போகும். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், ஸ்ரீனிவாசன் கிட்டச் சொல்லி CSK சட்டையை மாத்தச் சொல்லுங்க. கடக ராசிக்குக் கறுப்பு வெள்ளை தான் போடணும். கலைஞரே மாத்திட்டாரே, பார்க்கலியா நீங்க?
வடிவேலு:
கணக்கு பாக்கற பிகர் வேற, கணக்கு பண்ற பிகர் வேறன்னு இப்பவாச்சும் புரிஞ்சிருக்குமே? ஒண்ணும் கவலைப் படாதே. என் பக்கத்துல ஒரு இடம் காலியா இருக்கு . நீயும் என்னை மாதிரி தலையில துண்டை போட்டுக்கிட்டு குத்த வைச்சு உட்காரு. ரெண்டு பேரும் ஜோடியா சும்மா இருப்போம்.
பாமர கிரிக்கெட் ரசிகனின் எச்சரிக்கை:
வீரு மற்றும் கம்பீருக்கு:
உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டதாலும், இந்திய அணிக்காக ரொம்ப வருஷமா ஆடுவதாலும் உங்களுக்குக் கேப்டன்சி குடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.
வீரு அவர்களே, உங்கள் கேப்டன்சி லட்சணம் தான் வருஷா வருஷம் IPLல் வெளிப்படுகிறதே, இன்னுமா உங்களுக்கு அந்த நப்பாசை?
கம்பீர் அவர்களே, எல்லோரும் டெண்டுல்கர் கிளீன் போல்ட் ஆவதைப் பற்றி வருத்தப் பட்டுக் கொண்டிருப்பதால் உங்களை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று எண்ண வேண்டாம். கேவலமாக அவுட் ஆவதில் வரலாறு படைக்க வேண்டுமென்று எதாவது வேண்டுதலா? நைட் ரைடர்ஸ் IPL ஜெயித்ததற்கு உங்க கேப்டன்சி மட்டுமே காரணமல்ல என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.
தோனிக்கு:
வேறு ஒரு விக்கெட் கீப்பரையோ, கேப்டனையோ வர விடாமல் இவ்வளவு வருடம் கட்டிக் காத்து வருகிறீர்களே, அந்த அளவுக்கு பதவி வெறியும் பண வெறியும் உங்களை ஆட்டிப் படைக்கிறதா?
முதல் T20 உலகக் கோப்பை ஜெயிக்கும்போது நீங்கள் 26 வயது இளைஞன். ஆனால் இன்றோ நீங்களும் முப்பதைக் கடந்த முதியவர்களில் ஒருவன் என்பதை மறந்து விட்டீர்களா? அல்லது மறைக்கப் பார்க்கிறீர்களா?
டெஸ்ட் கிரிக்கெட்டில் சேர்ந்தாற்போல் நான்கு பந்துகளை சந்திக்கத் திராணியில்லாத உமக்கு டெஸ்ட் கேப்டன் பதவி ஒரு கேடா? தயவு செய்து வரவிருக்கும் இங்கிலாந்து தொடரில் அந்தத் தவறைச் செய்யாதீர்கள்.
எவ்வளவு கேவலமாக ஆடினாலும் ரோஹித் ஷர்மாவுக்கும் ராயினாவுக்கும் தொடர்ந்து கரிசனம் காட்டுகிறீர்களே, அவர்களை விட கம்பீரும் வீருவும் எந்த விதத்தில் தாழ்ந்தவர்கள்?
கிரிக்கெட்டில் அரசியல் செய்து செய்து உங்களுக்கு கிரிக்கெட் மறந்து விட்டது என்று நினைக்கிறோம். அதனால் சிறிது காலம் வெறும் கிரிக்கெட் வீரனாக இருந்து பாருங்கள். அணியில் ஒருவனாக இருங்கள். ஒரு வேலைக்காரனாக உங்கள் வேலையை மட்டும் செய்யுங்கள். இல்லையேல் சச்சினுக்கு முன்னால் நீங்க ஓய்வு பெற வேண்டி வரும், ஜாக்கிரதை!!!
Jayaraman
New Delhi
No comments:
Post a Comment