Tuesday, June 21, 2011

இன்செப்ஷன்....தமிழில்



எல்லோரும் வியந்து பாராட்டிய ஆங்கிலப்படம் இன்செப்ஷன். அதை நம்ம தமிழ் இயக்குனர்கள் சிலர் அவங்க ஸ்டைலில் தமிழ்ப்படுத்தறாங்க:

ராமநாராயணன்:
பண்ணையார் பையன் வள்ளியைக் கெடுத்து கொன்னுடறான். அவ அவனை பழிவாங்க ஆவியா அலையறா. பண்ணையார் பையனோட பொண்டாட்டி மனசுல புகுந்து அந்த வீட்டையே ஆட்டி வைக்கறா. அதை நம்ம மந்திரவாதி ஹீரோ எப்படி அந்த பொண்ணு மனசை தன் சக்தி மூலமா எப்படி மாத்தறார்னு கதை போகுது. ட்விஸ்ட் என்னன்னா வள்ளியோட அண்ணன் தான் நம்ம ஹீரோ. பிரபு, நிழல்கள் ரவி, சண்முகசுந்தரம், மாதுரி, கனகா இல்லேன்னா ரோஜா இவங்களை போட்டுக்கலாம். கிருஷ்ணவேணி தியேட்டர்ல 100 நாட்கள் நிச்சயம். படத்துக்குப் பேரு கனவு காத்த காளிகாம்பா

விட்டலாச்சார்யா:
இந்த கதையை நான் 60 வருஷத்துக்கு முன்னாடியே எடுதுட்டேனே? மாயா பஜார், ஜகன் மோகினி, மாய மோதிரம் எல்லாம் பாக்கலையா நீங்க? கூடு விட்டு கூடு பாயுற தொழில்நுட்பம் தானே? இதுக்கு எதுக்குய்யா இவ்ளோ பில்டப்? கனவுக்கன்னின்னு படத்துக்கு பேர் வெச்சுக்கோங்க.

கௌதம் மேனன்:
DCP ராகவனும் ACP அன்புசெல்வனும் இளமாறன், பாண்டியன் மற்றும் அவங்களோட கூட்டாளிங்க மன நிலையை எப்படி டெக்னிகலா change பண்றாங்கன்னு காட்டலாம். ஒரு கட்டத்துல அவங்க பயன்படுத்தற ட்ரீம் டெக்னிக் அவங்களுக்கு எதிரா திரும்பிடுது. அவங்க ரெண்டு பெரும் சைக்கோவா மாறிடறாங்க. அவங்களுக்குள்ள நடக்கற மோதல்கள், போராட்டங்கள் இதெல்லாமும் கதையில் வருது. நியூயார்க்ல ரெண்டு பாட்டு கண்டிப்பா வெச்சிடணும் (ஹீரோவுக்கு பின்னாடி நானும் ஸ்டெப்ஸ் போடுவேன், சென்டிமென்டா). கனவுகள் ஆயிரம்னு டைட்டில் வெச்சிக்கலாம்

பேரரசு:
ஹீரோ தன் தங்கச்சியை பட்டணத்துல கட்டிக் குடுக்கறார். ஆனா அங்க ரௌடிங்க அட்டகாசம் பண்றாங்க. அவங்க மனசுக்குள்ள போய் எப்படி அவங்கள எல்லாம் இந்தியாவின் சிறந்த குடிமகன்களா மாத்தறார்னு கதை போகுது. சிம்பு இல்லேன்னா விஜய் ஹீரோ. "என்னை ஜெயிக்கலாம்னு கனவு காணாதீங்க, ஏன்னா என்னை கனவுல கூட உங்களால ஜெயிக்க முடியாது" அப்படின்னு பஞ்ச் வெச்சுக்கலாம். இதே கான்செப்டை சந்தானம் ட்ரை பண்ணி பிகர்ங்க கிட்ட உதை வாங்கறதை காமெடி ட்ராக்கா வெச்சிக்கலாம்.

TR:
சின்ன வயசுல தான் கண்ட கனவு தொலைஞ்சி போச்சுன்னு அதைத் தேடி கண்டுபிடிக்கறதுக்காக சென்னைக்கு வர்றார் ஹீரோ. அங்க அவர் எல்லார் கனவுக்குள்ளேயும் போய் தான் கண்ட கனவு கிடைக்குமான்னு பாக்கறார். இதுக்கு நடுவுல ஹீரோயின் கனவுல ஹீரோ கிராஸ் ஆவுறார். இன்னொரு ஹீரோயின் ஹீரோ கனவுல கிராஸ் ஆவுது. அவங்களுக்குள்ள நடக்கற முக்கோண கனவு தான் கதை. நடுவுல அரசியல் நையாண்டி, சமூக அநியாயங்கள், மும்தாஜ் இல்லேன்னா நமீதாவோட குத்துப்பாட்டு எல்லாம் உண்டு. எல்லாப்பாட்டும் சிம்பு தான் பாடுவான். தமன்னா, அமலா பால் ஹீரோயின். - என்னது ஹீரோ யாரா? நான் தாங்க. என்னோட நண்பர்கள்ல ஒருத்தனா என் ரெண்டாவது பையனும் இருப்பான். - படம் பேரு கனவு அழிவதில்லை

மணிரத்னம்:
ஆக்சுவலா நான் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை இப்படித் தான் டெவெலப் செஞ்சு வெச்சிருந்தேன். He will be traveling through various characters through the minds, you know. Since பொன்னியின் செல்வன் டிராப் ஆயிட்டதால பொன்னின்னு ஒரு லேடி கேரக்டர் உருவாக்கிடலாம். Well, title can be பொன்னியின் கனவு. ஐஸ்வர்யா, மாதவன், அபிஷேக் இருந்தாதான் படம் வியாபாரம் ஆவும்.

ரவிக்குமார்:
நாட்டாமையோட தம்பிங்களை நாட்டாமைக்கு எதிரா வில்லன் எப்படி திசை திருப்பறார்னு காட்டிடலாம். சரத் குமார் இல்லேன்னா சூப்பர் ஸ்டார் ஹீரோ. மூணு ரோல் பண்றாங்க. அக்சுவலா இதுல வில்லன் தான் ஹீரோ, ஹீரோ தான வில்லன், புது மாதிரியான ட்விஸ்ட் வெச்சிருக்கேன். படத்தோட பேரு கனவான் – the dream judge.

அமீர்:
வேற ஜாதி பையனை லவ் பண்ற தன் பொண்ணு மனசுல அவனைப் பத்தின தப்பான அபிப்ராயங்களை உருவாக்கறார் ஜாதி வெறி பிடித்த ஹீரோயினோட அப்பா. முழுக்க முழுக்க பொட்டல் காட்டுல தான் ஷூட்டிங். நடுநடுவே கிராமத்துல இருக்கற கனவு சம்பந்தப்பட்ட நம்பிக்கைகளையும் காட்டறோம். - கனவு வீரன். முடிஞ்சா நானே ஹீரோவா நடிக்கறேன்.

தமிழ் சினிமாவின் LowLow budget இயக்குனர்கள்:
சின்ன வயசுலேர்ந்தே ஹீரோயின் பின்னாடி பைத்தியமா இருக்கார் ஹீரோ. திடீர்னு அவருக்கு ஒரு பயங்கரமான வியாதி இருக்கறது தெரிய வருது. அது தன் காதலிக்குத் தெரியக்கூடாதுன்னுட்டு தன்னைப் பற்றிய தப்பான இமேஜை தன் நண்பன் மூலமா அவ மனசுல விதைக்கறார். ஒரு கட்டத்துல நண்பருக்கும் ஹீரோயினுக்கும் லவ் ஆயிடுது. அதே நேரம் ஹீரோவுக்கு ஒரு வியாதியும் இல்ல, ஆஸ்பிடல் ரிபோர்ட்ல நடந்த ஒரு குளறுபடி தான் காரணம்னும் தெரிய வருது. இவங்க மூணு பேருக்கு நடுவுல நடக்கற உணர்ச்சிப் போராட்டம் தான் மீதிக் கதை. - குமாரசாமியின் கனவு, கனவு மெய்ப்பட வேண்டும் இப்படி எதாச்சும் டைட்டில் வெச்சுக்கலாம்..

பாலா:
சித்தி கொடுமையினால மன நிலை பாதிக்கப்பட்ட ஹீரோ. அவனை சுத்தி இருக்கறவங்க அவன் மேல தங்கள் கனவுகளை திணிச்சு தனக்கு வேண்டிய வேலைகளை செய்துக்கறாங்க. அந்த கொடுமைலேர்ந்து அவன் எப்படி மீண்டு அவதாரம் எடுக்கறான்னு கதை போகுது. பைரவன், அர்த்தநாரி இப்படி டெரரா டைட்டில் வெச்சுக்கலாம்.

முருகதாஸ்:
உலகின் மிகப்பெரும் பணக்காரரான சூர்யாவுக்கு மூளையில் ஒரு பிரச்சினை. திடீர்னு அவர் தன்னோட செயல்பாட்டை இழந்து மற்றவங்க சொல்றபடி கேக்கறா மாதிரி ஒரு பீலிங். அதுல பல சம்பவங்கள் நடக்குது, பல பிரச்சினைகளும் உருவாகுது. அவரைச்சுற்றியுள்ள எதிரிகள் கிட்டேர்ந்து தன்னை காப்பாற்றிக்கொள்ளவும் அவர்களை வேரோடு அழிக்கவும் நாடு நாடா ஓடறார். நைஜீரியா, பிரான்ஸ், turkey இங்கெல்லாம் சூட் பண்றோம். ஆறாவது கனவுன்னு பேர் வைக்கலாம்.

ஷங்கர்:
பழசை எல்லாம் மறந்த நிலையில் ஹீரோ. கனவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு இன்டர்நேஷனல் க்ரூபோட குற்றங்களில் ஈடுபடறார். ஒரு பணக்கராரின் மனசை மாத்தற அசைன்மென்ட் வருது.ஆனா அந்த பணக்காரரின் கனவுக்குள் போகும்போது தான் அவங்க கிட்ட நிறைய கறுப்புப் பணம் இருக்கறதும், தன் தம்பி அவங்க தொழிற்சாலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் இறந்து போயிருக்கான்னும் தெரிய வருது. அவங்களையெல்லாம் சாகற மாதிரி கனவு காண வெச்சு எல்லாரையும் தற்கொலை பண்ணிக்க வைக்கறார். கார்த்தி இல்லேன்னா விக்ரம் ஹீரோ, அனுஷ்கா, இலியானா ஹீரோயின். அம்பது கோடிக்கு ஸ்ரீபெரும்புதூர்ல தொழிற்சாலை செட் போடறோம், நியூசிலாந்து, அட்லாண்டிக் பனிப்ரதேசம்,அமேசான் காடு இங்கெல்லாம் சாங்க்ஸ் சூட் பண்றோம், கிளைமாக்ஸ் fight ஏறோப்ளேனுக்குள்ள நடக்குது. நியூயார்க் விமான நிலையத்தை ஒரு மாசத்துக்கு லீசுக்கு எடுக்கறோம். Jetliner 380 ஆர்டர் பண்ணிடுங்க அப்போ தான் நின்னு நிதானாமா ஷூட்டிங் பண்ண முடியும். (தயாரிப்பாளர் - அப்படியே எனக்கு ஒரு திருவோடும் ஆர்டர் பண்ணிடுங்க). இந்திரன் - the creator

Dubber மருதபரணி:
எதுக்குங்க இவ்ளோ கஷ்டபட்றீங்க? அப்படியே தமிழ்ல டப் பண்ணி ரிலீஸ் பண்ணிட வேண்டியது தானே? 15 நாள் தான் வேலை. கனவு மன்னன், கனவுத் தொழிற்சாலையும் காலபைரவனும், ஏழாம் உலகம், இப்படி உட்டாலக்கடியா டைட்டில் வெச்சிட்டா போச்சு.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...