Monday, May 28, 2012

IPL 5: திருவிழா முடிந்ததுஎல்லாம் வல்ல இறைவா!! அடுத்த IPL வரை வெற்றிக் கொண்டாட்டம் என்ற பெயரில் ஷாருக் கான் அடிக்கும் குட்டிக் கரணங்களையும் இன்ன பிற தேவையில்லாத சேஷ்டைகளையும் தாங்கிக் கொள்ளும் மன வலிமையைத் தந்தருள்வாயாக.

தொடர்ந்து 54 நாட்களாக நடைபெற்று வந்த கிரிக்கெட் கோடைத் திருவிழா ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. எதிர்பார்த்தது போல் கல்கத்தா அணி வெற்று பெற்றுவிட்டது (IPL அதிகாரபூர்வ வெப்சைட்டில் வியாழக்கிழமையே CSK vs. KKR தான் பைனல்ஸ் என்று போட்டு விட்டார்கள்) . இரண்டு மாதங்கள் நன்றாக பொழுதை ஒட்டிய நமக்கு இப்பொழுது திடீரென்று வாழ்க்கையே சூன்யமாகி விட்டது போன்ற உணர்வு. சரி விடுங்க, தோனி, விராட், ஹர்பஜன், ராயினா மாதிரி நாமளும் புட்பால் விளையாட வேண்டியது தான்.


கொல்கத்தா:
ஆழ்ந்த அனுதாபங்கள். பின்னே? இனிமே "Defending Champions " என்று சொல்லியே உங்கள் தூக்கத்தைக் கெடுக்கப் போகிறார்கள். கம்பீர், நீங்க நாலு வருஷமா நாய் படாத பாடு பட்டுத் தான் இந்த தடவை ஜெயிச்சிருக்கீங்க. அதுக்காக நல்ல அணி தான் நல்ல கேப்டனை உருவாக்கும், நல்ல கேப்டனால் நல்ல அணியை உருவாக்க முடியாதுன்னெல்லாம் ஏன் சார் தேவையில்லாம வாயை விடறீங்க? உங்களுக்கு கடுப்பு கங்கூலி மீதா அல்லது தோனி மீதா? உன் மேல இருந்த மரியாதையே போச்சுப்பா. அது சரி, முதலாளி எவ்வழி, தொழிலாளி அவ்வழி. அப்புறம், உங்க முதலாளியை உற்சாக பானத்தை அளவா அடிக்கச் சொல்லுங்க. ஏதோ அந்தப் பெரியவர் கையப் புடிச்சு தடுத்தாரு. இல்லேன்னா உங்க ஆளு உணர்ச்சிவசப்பட்டு முதல் மாடியிலேர்ந்து குதிச்சு கிங்கா மிங்கா ஆயிருப்பாரு. மறக்காம இந்த வெற்றியை பூனம் பாண்டேவுக்கு டெடிகேட் பண்ணிடுங்கப்பா.

சென்னை:
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆசியா கப், IPL - நல்லாவே பார்ம்ல இருக்கீங்க தோனி. நீங்க செமி பைனலுக்கு வந்ததே ஓசியில. அதனால பைனல்ஸ் தோத்ததெல்லாம் உங்களை பெரிசா பாதிச்சிருக்காது. ஆனா வழக்கமா நீங்க வாங்கற Fair Play அவார்டும் உங்கள் கையை விட்டுப் போனது தான் பேரதிர்ச்சியா இருக்கு. மக்களே கூட நீங்க ஜெயிக்கணும்னு நினைக்கலை. ஏன்னா இங்கிலாந்து கிட்டயும் ஆஸ்திரேலியா கிட்டயும் மாறி மாறி அடி வாங்கிட்டு வந்த உங்களுக்கு IPL கேக்குதான்னு அவ்ளோ கடுப்பு. இருந்தாலும் அஞ்சு வருஷமா மொக்கை போலிங்கை நம்பி செமி பைனல் வரைக்கும் வர்றீங்க பாருங்க, அங்க தான் நீங்க நிக்கறீங்க. ஆமாம், உங்க ஓனர், அதாம்பா அந்த கண்ணாடி போட்டவரு, இந்த தடவை ஒரு மேட்ச்ல கூட அவரை பார்க்க முடியலையே?டெல்லி:
வீரு பாய், இந்த ரேஞ்சுல கேப்டன்சி பண்ணினீங்கன்னா ரஞ்சி டீமுகுக் கூட உங்களை கேப்டனா போட மாட்டாங்க. செம பிக்சிங்க்னு எல்லாருக்கும் சந்தேகம் வர்ற அளவுக்கு சென்னை மேட்ச்ல ஏகப்பட்ட குளறுபடி பண்ணிட்டீங்க. ரொம்ப நம்பிக்கையோட இருந்தோம், இப்படி ஏமாத்திட்டீங்களே? என்னவோ போங்க.

மும்பை:
எதிர்பார்த்த மாதிரியே சொதப்பினதுக்கு நன்றி. இன்னும் பயிற்சி வேண்டுமோ? தோனி அடிச்ச அடியில அப்படியே ஷாக் ஆகி நின்னிட்டீங்க போலிருக்கு. அம்பானி ரொம்ப கறார் பேர்வழி. போட்ட முதலுக்கு ரிட்டர்ன் வரலேன்னா அந்த ஆள் என்ன வேணா செய்வாரு, ஜாக்கிரதை!மற்ற டீமைப் பற்றி நிறைய அலசிட்டோம். ஒண்ணும் புதுசா சொல்றதுக்கில்ல. மந்தீப் சிங், சுனில் நரைன், ராயல்ஸ் டீம் இவங்களுக்கெல்லாம் சரியான அவார்ட் குடுத்து நல்ல பேர் வாங்கிட்டாங்க. மீடியா வழக்கம் போல் இன்னும் ஒரு வாரத்திற்கு வெற்றி பெற்றவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள் - நாளைய நாயகன், நிரந்தர தளபதி, கிங், டான் ஆப் கிரிக்கெட் போன்ற பட்டங்களோடு. இந்த வேளையில், சில புரியாத புதிர்களுக்கும் கேள்விகளுக்கும் விடை காண வேண்டியது அவசியமாகிறது- குறிப்பாக CSKவை குறிவைக்கும் கேள்விகளுக்கு:

கேள்வி - அது எப்படி சென்னை அணியினர் கடைசி ரெண்டு மேட்ச் மட்டும் அபரிமிதமாக ஆடி இறுதிப் போட்டிக்குள் நுழைய முடிந்தது?

பதில் - யோவ், அந்த ரெண்டு மேட்ச்ல ஒழுங்கா ஆடினாத்தான்யா இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும். காலாண்டு, அரையாண்டுத் தேர்வில் பெயிலாகும் மாணவன் இறுதித் தேர்வில் பாஸ் ஆவதில்லையா, அது மாதிரி தான். விடா முயற்சி, விஸ்வரூப வெற்றி.

கேள்வி - அது எப்படி ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பெங்களுரு அணிகள் சொல்லி வைத்தாற் போல் தோற்று சென்னைக்கு வழிவிட்டனர்? ஒரு வேளை பிக்சிங்காக இருக்குமோ?

பதில் - CSK மேல உங்களுக்கு ஏன் சார் இப்படி ஒரு கொலைவெறி? பூனே வாரியர் மாதிரி மொக்கை டீம்னு நினைச்சுட்டீங்களா? ஹஸ்ஸி, ராயினா, அஷ்வின் மாதிரி நல்ல ப்ளேயர்ஸ் அங்கேயும் இருக்காங்க. அவங்களும் பாதிக்குப் பாதி மேட்ச் ஜெயிச்சிருக்காங்க. நீங்க சொன்ன மூன்று அணிகளும் வெற்றிக்காக ஏங்கும் அணிகள். குறைந்த பட்சம் செமி பைனலிலாவது இடம் பிடிக்க வேண்டுமென்று தவம் கிடக்கும் அணிகள். அவர்கள் பிக்சிங்கிற்கு அடி பணி வேண்டிய அவசியம் இல்லை. அதிலும் ராயல்ஸ் லலித் மோடியின் கண்டுபிடிப்பு. பிசிசிஐ, மன்னிக்கவும், CSK கண்டிப்பாக அவர்களுடன் சமரசத்தில் ஈடுபடாது.கேள்வி - CSKவுக்கு பிசிசிஐயின் அருள் எப்பொழுதும் உண்டு. அதனால் தான் நான்கு முறை இறுதிப்போட்டிக்குள் நுழைய முடிந்தது. அது பிசிசிஐயின் செல்லம்.

பதில் - அப்போ ஏன் சார் பைனல்ஸ் ஜெயிக்கல? ஆனால் இந்த கேள்வி தவிர்க்க முடியாத ஒன்று. ஸ்ரீநிவாசன் பிசிசிஐ தலைவராக இருப்பதால் அந்த நிழல் CSK மீது படிவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. நீங்கள் சொல்கிறபடி பார்த்தால் அவர்கள் பதினாறு மேட்சும் ஜெயிச்சிருக்கலாமே? மற்ற எல்லோரிடமும் வெற்றி தோல்வி என்று மாறி மாறி சந்தித்தவர்கள் மும்பையிடம் இரண்டு முறை தோற்க வேண்டிய அவசியம் என்ன? உங்கள் லாஜிக் படி பார்த்தால் ராயல்ஸ் முதல் எடிஷனை வென்றதும் பிக்சிங் தான். ஏனெனில் ராயல்ஸ் அப்போதைய IPL கமிஷனர் லலித் மோடியின் மறைமுக அணி.

கேள்வி - டெல்லி அணியினர் கண்டிப்பாகக் காசு வாங்கிவிட்டனர். இல்லையென்றால் மார்கல் போன்ற வீரரை முக்கியமான ஆட்டத்தில் சேர்க்காமல் இருப்பார்களா?

பதில் - முட்டாள்தனமாகத்தான் இருக்கிறது. ஆனால் மார்கெல்லை சேர்த்து அதற்குப் பதிலாக மஹேலாவையோ அல்லது ரஸ்ஸலையோ உட்கார்த்தி வைத்தாலும் நீங்கள் இதே கேள்வியைத் தான் கேட்பீர்கள். லீக் ஆட்டங்களில் பிரமாதமாக ஆடி கடைசி கட்டத்தில் சொதப்புவது டெல்லி அணிக்கொன்றும் புதிதல்ல. பரிசளிப்பு விழாவின் போது தோனியும் வீருவும் பத்து ஆடி விலகி நின்றே பேசியது, சம்பிரதாயத்திற்காக முகத்தைக் கூட பார்க்காமல் கை குலுக்கிக் கொண்டது போன்ற சம்பவங்கள் மூலம் அவர்கள் இருவருக்குமிடையே வாய்க்காத் தகராறு மிகவும் முற்றி விட்டதென்பதை உணர முடிந்தது. அப்படி இருக்கும்போது யார் வல்லவன் என்று நிரூபிக்க முயலுவார்களே ஒழிய பிக்சிங் செய்ய வேண்டிய தேவை இல்லை. ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் அவர்களைப் போன்ற மானங்கெட்டவர்கள் யாரும் இருக்க முடியாது.இன்னும் இதே பாணியில் பல கேள்விகள் இருக்கின்றன. ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது சென்னை ஜெயிப்பது யாருக்கும் பிடிக்கவில்லை என்றே தெரிகிறது. அதற்கு காரணம் யார்? தோனியா? ஸ்ரீநிவாசனா? அல்லது வட இந்தியர்களுக்கு இருக்கும் "மதராசி" என்ற மனப்பான்மையா? தெரியவில்லை. CSK ஜெயித்தால் பிக்சிங் என்று சொல்பவர்கள் தோற்றால் மட்டும் "இந்தப் பசங்களுக்குத் திமிரு, நல்லா வேணும், தோனி சரியான வேஸ்ட், அவன் எங்க போனாலும் தோல்வி தான்" என்று கூறுவது வேதனை கலந்த வேடிக்கை..

ஆனால் மேற்கண்ட கேள்விகளுக்கு மக்களைக் குறை கூற முடியாது. அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ பிக்சிங் என்ற கண்ணாடி அவர்களுக்கு அணிவிக்கப் பட்டுவிட்டது. தயவு செய்து அந்த கண்ணாடியைக் கழட்டி விட்டு கிரிக்கெட்டை பாருங்கள். இல்லையென்றால் மஞ்சக்காமாலை வந்தவனுக்கு எல்லாமே மஞ்சளாகத் தெரிவது போல் உங்களுக்கும் எல்லாமே தவறாகத் தான் தெரியும்.

அடுத்த முக்கியமான விஷயம் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ வழங்கும் நிதி உதவி. மிகவும் நல்ல விஷயம். வரவேற்கிறோம். ஆனால் அங்கேயும் உங்கள் அதிகார புத்தியைக் காட்டுவது அவசியமில்லாத ஒன்று. கவாஸ்கர், ஸ்ரீகாந்த் போன்ற ஏழைகளுக்கு கோடிக்கணக்கில் நிதி உதவி அளித்த நீங்கள் கீர்த்தி ஆசாத், கபில் தேவ் போன்றவர்களுக்கு அந்த நிதி உதவியை மறுப்பதன் மூலம் என்ன சாதித்து விடப் போகிறீர்கள்? தயவு செய்து கொஞ்சம் பெரிய மனுஷத்தனமாக நடந்துகொள்ளுங்கள். இந்தியாவுக்கு முதன் முதலாக உலகக் கோப்பையை வாங்கித் தந்த கேப்டன் கபில் தேவ். ஆனால் அவரை 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் கூட பார்க்கும் வாய்ப்பை மறுத்தது சிறுபிள்ளைத்தனமே அன்றி வேறில்லை. குறைந்த பட்சம் IPL இறுதிப் போட்டியில் அவரை அழைத்து அவருக்கான தொகையைக் கொடுத்து வெற்றிக் கோப்பையை அவர் கையாலேயே குடுக்க வைத்திருந்தால் உங்கள் மீதான களங்கம் அனைத்தும் துடைக்கப்பட்டிருக்குமே? அந்த அழைப்பை ஏற்பதும் ஏற்காததும் கபிலின் விருப்பம். ஏனென்றால் அவர் உங்கள் மீது போட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. கபில் இன்னா செய்தவராகவே இருக்கட்டும். நீங்கள் ஏன் அவர் நாண நன்னயம் செய்யக்கூடாது?கடைசியாக ஒரு விஷயம், பெட்ரோல் விலையேற்றம், உணவுப் பொருட்கள் விலையேற்றம், ஊழல் செய்யும் மந்திரிகள், சுட்டெரிக்கும் வெயில், பவர் கட், டெங்கு, மலேரியா, வேலை நிரந்தரமின்மை, குடிநீர் தட்டுப்பாடு, சுகாதாரமில்லாத மருத்துவமனைகளில் இறக்கும் பிறந்த குழந்தைகள், கலப்பட சரக்கு, வெந்நீர் போல இருக்கும் பீர், தினசரி டிராபிக் ஜாம், பெண்களுக்கெதிரான தொடரும் பாலியல் கொடுமைகள் - இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு நடுவில் 600-700 ரூபாய் செலவழித்து டிக்கெட் வாங்கி, மேற்கொண்டு மைதானத்தில் மினரல் வாட்டருக்கும் நொறுக்குத்தீனிக்கும் 500-600 செலவழித்து மேட்ச் பார்க்கும் எங்களைப் போன்ற சாதாரண ரசிகர்களின் மகிழ்ச்சியிலும் வயிற்றிலும் மேட்ச் பிக்சிங் என்ற மண்ணை அள்ளிப் போடாதீர்கள். அது பிக்சிங்காகவே இருந்துவிட்டுப் போகட்டும், தயவு செய்து எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டாம். கிரிக்கெட்டின் மீதும் வீரர்களின் மீதும் நாங்கள் இன்னும் நிறைய அன்பு, மரியாதை மற்றும் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அதை தயவு செய்து குலைக்காதீர்கள். எது செஞ்சாலும் பார்த்து செய்ங்க, எங்களுக்குத் தெரியாம செய்ங்க.

என்ன பாக்கறீங்க? இந்த வாரம் மட்டுமல்ல, கிரிக்கெட்டைப் பொறுத்தவரை எல்லா வாரமும் நம்ம வாரம் தான். நாம ஆதரவு கொடுக்கலேன்னா சச்சின் எலெக்ட்ரிக் ட்ரெயின்ல லஞ்ச பாக்ஸ் எடுத்துக்கிட்டு ஏதோ ஒரு ஆபீசுக்கு போயிட்டு இருந்திருப்பாரு, தோனி அதே ட்ரெயின்ல டிக்கெட் கிழிச்சிக்கிட்டு இருந்திருப்பாரு. கெத்தா காலரை தூக்கி விடுங்க பாஸு.

கடைசியா ஒரு நேயர் லைன்ல வர்றார்,

ஹெலோ... என்ன சார்? டோர்னமென்ட் சீக்கிரம் முடிஞ்சிடுச்சா? இன்னும் ஒரு மாசம் நீட்டிச்சா நல்லாருக்குமா? "ரெண்டும் மாசம் கிரிக்கெட்டா? சரியான பைத்தியக்காரனுங்க" அப்படின்னு கொஞ்ச நாள் முன்னாடி சொன்னீங்களே? ஒஹ், ஒரு ப்ளோவுல சும்மா சொல்லிட்டீங்களா? சரி விடுங்க, ஸ்ரீனி கிட்ட சொல்லி நம்ம செலிப்ரிட்டி லீக்ல பைனல்ஸ் வர்ற ரெண்டு டீமையும் IPLல் சேர்த்துக்க சொல்லிட்டாப் போச்சு. 11 டீம், 110 மேட்ச். போட்டியை இன்னும் ஒரு இரண்டு வாரத்துக்கு இழுத்துடலாம். நடக்குமான்னு கேக்கறீங்களா? இது IPL பாஸ், இங்க எதுவும் நடக்கும்.

Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...