Thursday, May 24, 2012

சச்சின் மனம் திறக்கிறார்...



எப்பப் பார்த்தாலும் நம்ம சச்சின் மேல எதாச்சும் குறை சொல்றதே சில பேருக்கு வேலையா இருக்கு. நம்ம மாஸ்டர் எதுக்கும் பதில் சொல்லாம சைலண்டா இருக்கறது அதைவிட கடுப்பா இருக்கு. எப்படியும் அவரை நேர்ல சந்திச்சு சில கேள்விகளுக்கு பதில் வாங்கிடணும்னு முடிவு பண்ணி மும்பை போனோம். ஒரு வழியா அடிச்சு புடிச்சு அப்பாயின்ட்மென்ட் வாங்கி... இதோ சச்சினின் மனம் திறந்த பேட்டி - அவரது புதிய வீட்டிலிருந்து:

சச்சின், "தைரியமா உள்ள வந்து உக்காருங்க, இந்த வீட்டுக்குண்டான எல்லா அனுமதியும் முறைப்படி வாங்கிட்டேன்"

"உங்களை ரொம்ப அறுக்க மாட்டோம், சில கேள்விகள், அதுக்கு உங்களோட தெளிவான பதில்கள், அவ்ளோ தான் சார்"

"கேளுங்க கேளுங்க"

முதல் கேள்வி...சச்சின் 100 அடிச்சா அந்த மேட்ச் விளங்காது - இது எல்லாரும் பரவலா பேசற ஒரு விஷயம், நீங்க இதை எப்படிப் பாக்கறீங்க?

சிரித்துக் கொண்டே..."என்னோட பலம், பலவீனம் ரெண்டுமே மக்களோட எதிர்பார்ப்பு தான். மக்கள் என்னோட உழைப்பு வீணாப் போகக்கூடாதுன்னு நினைக்கறாங்க. ஆனா அவங்க நினைச்சதுக்கு எதிர்மாறா நடக்கும்போது அவங்க எதிர்பார்ப்பு எனக்கெதிரா திரும்பிடுது. இந்தியா ஆடற எல்லா மேட்சிலேயும் நான் 200 அடிச்சு வின் பண்ணிக் குடுக்கணும்னு எதிர்பாக்கறாங்க. அது எப்படிங்க முடியும்? மற்ற டீம்லேயும் இதே மாதிரி நடக்குது. வேர்ல்ட் கப் காலிறுதியில பாண்டிங் நூறு அடிச்சாரு, ஆனா அவங்க தோத்தாங்க, பைனல்ஸ்ல ஜெயவர்த்தனே நூறு அடிச்சாரு. அவங்களும் தோத்தாங்க. இப்போ நடந்த சாம்பியன்ஸ் லீகல கூட வார்னர் செஞ்சுரி அடிச்சும் அவங்க டீம் தோத்துப் போச்சு. ஒரு பௌலர் அஞ்சு விக்கெட் எடுத்தும் அவங்க டீம் தோத்துப்போன கதை இருக்கு. தனிப்பட்ட ஒரு ஆளோட திறமைக்கும் டீம் வெற்றிக்கும் ஏன் முடிச்சுப் போடறாங்கன்னு புரியல. கிரிக்கெட்டும் கால்பந்து மாதிரி ஒரு டீம் கேம் தான். அதை ஏன் மக்கள் புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்கன்னு தெரியல"



ரெண்டாவது....சச்சின் நல்ல பேட்ஸ்மேன், ஆனா மேட்ச்வின்னர் கிடையாது

"எப்படியெல்லாம் யோசிச்சு கேள்வி கேக்கறாங்க? இண்டர்நெட்ல சச்சின் அப்படின்னு அடிச்சா நான் இதுவரைக்கும் கிரிக்கெட்ல என்ன பண்ணியிருக்கேன், எனக்கு எது ஸ்ட்ராங் எது வீக்குன்னு டக்குனு கிடைச்சிடும். அதனால நான் அந்த ஏரியாவுக்குப் போக விரும்பலை.
மக்கள் என்ன எதிர்பாக்கறாங்கன்னா, இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரா ஆஸ்திரேலியாவுல ஆடணும். அவங்க ஒரு 400௦௦ ரன் டார்கெட் செட் பண்ணிட்டு நம்மள ஆட விடணும், நான் முதல்லேர்ந்து கடைசி வின்னிங் ஷாட் வரைக்கும் நின்னு செஞ்சுரி அடிக்கணும். எல்லா பௌலர்களையும் பாரபட்சம் பாக்காம அடிச்சு விளாசணும், Man of the match , Man of the series எல்லாமே நான் தான் வாங்கணும். இதுல வேடிக்கை என்னன்னா அவங்க ஆசைப்பட்ட மாதிரி நான் எல்லாம் பண்ணினாலும் "அவ்ளோதாம்பா, இனிமே அடுத்த 10 மேட்சுக்கு இவர் ஆடமாட்டாரு" அப்படின்னு கொஞ்சம் கூட கூசாம சொல்லிட்டு போயிடுவாங்க. என்னத்த சொல்ல போங்க!


3.....இந்த வீடு சம்பந்தப்பட்ட விவகாரம் ....

நான் எதுவும் சட்டத்துக்குப் புறம்பா செய்யலை. ஒரு வீட்டுக்குக் குடி போகறதுக்கு முன்னாடி முனிசிபாலிடி கிட்டேர்ந்து Occupation Certificate வாங்கணும். நான் வாங்கலை. ஆனா நான் வெறும் பூஜை மட்டும் தான் செய்யபோறேன், சாமான்கள் எதுவும் வீட்டுக்குள்ள ஏத்தமட்டேன்னு அவங்களுக்கு எழுதிக்குடுத்துட்டு தான் பூஜை பண்ணினேன். இதுல என்னால அரசாங்கத்துக்கு எந்த இழப்பும் இல்லைன்னு மட்டும் உறுதியா சொல்ல முடியும். பெனால்டி தள்ளுபடி பண்ணினது அரசாங்கத்தோட முடிவு. Btw, என்னோட பழைய வீட்டைக் கூட நான் திருப்பிக் குடுத்துட்டேன்.ஆனா கொஞ்சம் தாமதமாக் குடுக்க வேண்டியதாயிடுச்சு. அதுல ஒரு சின்ன வருத்தம் எனக்கு இப்பவும் இருக்கு. சீக்கிரமே குடுத்திருந்தா வேற ஒரு கஷ்டப்படற திறமையான வீரருக்கு ரொம்ப உபயோகமா இருந்திருக்கும்.



4.....பெர்ராரி காருக்கு கஸ்டம் டியூடி தள்ளுபடி செஞ்சது...

ஆக்சுவலா இந்த மேட்டரை நான் சரியா கவனிக்காம விட்டுட்டேன். அரசாங்கம் எனக்குத் தர்ற மரியாதைன்னு நினைச்சு அதை தட்டிக் கழிக்காம ஏத்துக்கிட்டேன். இந்தியாவில் உள்ள அனைத்து இளைஞர்களும் என்னை ஒரு வழிகாட்டியா பார்க்கும்போது நான் முன்னுதாரணமா இருந்திருக்கலாம். இனிமே சரி பண்ணிக்கறேன்.

5.....அக்தர் போலிங்குக்கு நான் பயப்படறேனா?

ஆக்சுவலா இது ஒரு ரெண்டும்கெட்டான் கேள்வி. பதில் சொன்னா நான் சின்னவனாயிடுவேன். சொல்லலேன்னா அவர் பெரிய ஆளாயிடுவார். வழக்கமா மைதானத்துக்குள்ள ஸ்லெட்ஜிங் நடக்கும். இவர் வெளியேயும் பண்றாரு. அவங்க பண்ற தீவிரவாதத்துல இதுவும் ஒரு வகை போலிருக்கு. But jokes apart, பௌலர்களின் திறமைக்கு நான் எப்பவுமே மரியாதை குடுத்திருக்கேன். அதுக்காக அவங்களுக்கு பயப்படறதா அர்த்தமில்லை. பயந்தா பேட் பிடிக்க முடியாது. In fact, அக்தரைப் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு. ஏன்னா வேகம் இருக்கற அளவுக்கு விவேகம் இல்லை அவர்கிட்ட. கிரிக்கெட்லயும் அவருக்கு இனிமே இடமில்லை. பௌலிங் கோச்சாக் கூட அவரை எடுப்பாங்களான்னா சந்தேகம் தான். அதனால கடைசி முயற்சியா இப்படி ஒரு புத்தகம் போட்டுப் பொழச்சுக்கோன்னு அவருக்கு யாராச்சும் யோசனை சொல்லியிருப்பாங்க போல. அக்தர் பொழைக்கறதுக்கு சச்சின், டிராவிட், கங்கூலி மாதிரியான இந்தியர்கள் வேண்டியிருக்கு. நமக்கு எல்லாரையும் வாழ வெச்சுத்தான் பழக்கம். அழிக்கத் தெரியாது. அதனால அவரும் பொழச்சுக்கட்டும்(சிரிக்கிறார்)



6.....சாம்பியன்ஸ் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உற்சாகமூட்டியது...

நானும் இதைப் பத்தி பத்திரிகைகள்ல படிச்சேன். ஒரு விஷயம் சொல்லுங்க, நீங்க ஒரு கம்பெனில வேலை செய்யறீங்கன்னா அந்த கம்பெனில இருக்கற வரைக்கும் அவங்களுக்கு விசுவாசமா இருக்கணுமா இல்லையா?. நான் மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு உற்சாகமூட்டியதும் அது மாதிரி தான். அதுக்குப் போய் நான் ஏதோ பெரிய தேசத்துரோகம் பண்ணிட்ட மாதிரி பேசறது ரொம்ப வேதனையா இருக்கு. இங்கிலாந்து டூர் போகும்போதே நான் ஜுரத்தோட தான் போனேன். போதாக்குறைக்கு காலில் வேற அடி பட்டிடுச்சு. ஒரு பக்கம் ரசிகர்களோட நூறாவது செஞ்சுரி எதிர்பார்ப்பு, இன்னொரு பக்கம் இனிமே நமக்கு இங்கிலாந்துல டெஸ்ட் விளையாடற பாக்கியம் கிடைக்குமான்னு ஒரு கிரிக்கெட் வீரனா, ரசிகனா எனக்குள்ள இருந்த ஏக்கம் - அப்போ எவ்வளவு வலியும் வேதனையும் நான் அனுபவிச்சேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும் (குரல் கம்முகிறது).

இனிமே அவரை கேள்வி கேட்பது சரியில்லை என்று நினைத்து கிளம்ப எத்தனித்தோம்.

"எங்க கிளம்பிட்டீங்க, உக்காருங்க" என்று சொல்லி விட்டு தொடர்ந்தார்.

"மேலே கேட்ட எல்லா கேள்விக்கும் பால் தாக்கரே ஸ்டைலில் "நான் ஒரு மராட்டியன், மராட்டியன் வளர்றது யாருக்கும் பொறுக்கலை" அப்படீன்னு ஒரே வரியில் பதில் சொல்லியிருக்கலாம். ஆனா நான் முதல்ல இந்தியன், அப்புறம் தான் மராட்டியன், ஹிந்து, சாய்பாபா பக்தன் எல்லாம். நான் ஆரம்பத்துல சொன்ன மாதிரி என்னோட பலம், பலவீனம் ரெண்டுமே மக்களோட எதிர்பார்ப்பு தான். அவங்க நினைக்கும்போது நான் செஞ்சுரி அடிக்கணும், அவங்க நினைக்கும்போது நான் ரிடையர் ஆகணும் - மைதானத்துல மட்டும் தான் நான் ரன் மெஷின். மற்றபடி, நானும் சாதாரண மனுஷன் தான்"



"சரி சார், எங்களுக்காக நேரம் ஒதுக்கி எங்களோட கேள்விகளுக்கெல்லாம் நிதானமா பதில் சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி, வர்றோம்"

சச்சின், "ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன், நான் கிரிக்கெட்டின் கடவுளான்னு தெரியாது. ஆனா கண்டிப்பா தேசத்துரோகி மட்டும் இல்லை. இதை மட்டும் உங்க வாசகர்களுக்கு அழுத்தமா சொல்லிடுங்க

Jayaraman
New Delhi

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...