Tuesday, February 7, 2012
கேலி...கிண்டல்...கிரிக்கெட்..
தொடர் தோல்விகள், சஹாரா கான்ட்ராக்ட் கோவிந்தா, ஆளில்லா மைதானங்கள், விளம்பரதாரர்களின் கறார் கண்டீஷன்கள் - "என்ன கொடுமை சார் இது?" அப்படின்னு சொல்ற அளவுக்கு நம்ம இந்திய கிரிக்கெட்டுக்கு சோதனை மேல சோதனை. போதாக்குறைக்கு வேலையில்லாத சினிமாக்காரங்க வேற கிரிக்கெட்டில முழு மூச்சா இறங்கி விளையாடறாங்க. அதுல சில பேர் நல்லாவும் விளையாடறாங்க. இப்படியே போச்சுன்னா நம்ம வீரர்களின் எதிர்காலம் என்னவாகும்னு யோசிச்சுப் பார்த்தோம். சினிமாக்காரங்க கிரிக்கெட்டுக்கு வரும்போது கிரிக்கெட்டர்கள் சினிமாவுக்குப் போனா?...
லக்ஷ்மன்:
ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு அண்ணன், நேர்மையான குமாஸ்தா கதாப்பாத்திரம் இவருக்கு நல்லாப் பொருந்தும். அப்படி ஒரு பாவமான மூஞ்சி. படத்தின் நடுவுல இவரை வில்லன்கள் போட்டுத் தள்ளினா இன்னும் விசேஷம். தாலி செண்டிமெண்ட், ஹீரோ பழி வாங்குதல்னு நிறைய ஸ்கோப் கிடைக்கும். தெலுங்குல ஒரு ரவுண்டு வரலாம்.
டிராவிட்:
கமலுக்கு அடுத்தபடியான அறிவுஜீவி. தொழில் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் அத்துப்படி. சரியான தொழில்நுட்பவாதிகள். பேச ஆரம்பிச்சாங்கன்னா ரொம்ப இன்டரஸ்டிங்கா இருக்கும். ஆனா கடைசி வரைக்கும் ஒண்ணும் புரியாது.
செஹ்வாக்:
"வந்தேண்டா பால்காரன்" - அப்படீன்னு ஓபனிங் சாங் எல்லாம் குடுக்க முடியாட்டாலும் ஓரளவுக்கு அதிரடியா இருக்கற ரோல்கள் இவருக்குக் கிடைக்கும். குறிப்பா ரெண்டு போலீஸ் ஆபீசர்கள் கதைன்னா இவரை நம்பி ஒரு ரோல் குடுக்கலாம். மவுன ராகம் கார்த்திக் மாதிரி ஷார்ட் அண்ட் ஸ்வீட் ரோல்னா இன்னும் விசேஷம். ஆனா அங்க போனாலும் அபிஷேக் பச்சன் மாதிரி ஒரு ஹிட் குடுத்துட்டு ஒன்பது பிளாப் குடுக்காம இருக்கணும்.
கம்பீர்:
விக்ரம் மாதிரி எவ்வளவு முயற்சி செஞ்சாலும் எலாம் வீணாப் போவுது. ஹீரோவுக்கு உதவி பண்ணிட்டு பாதியிலேயே மண்டையைப் போடற பிரெண்ட் கதாப்பாத்திரம் தான் இவருக்கு சூட் ஆவும். ஏன்னா இவரு கிரிக்கெட்லயும் அதைத் தான் பண்றாரு.
சச்சின்:
எல்லாரும் எதிர்பார்க்கும்போது யாருமே எதிர்பார்க்காததை செய்யறது தான் இவரோட ஸ்பெஷாலிட்டி. அதனால ஆன்டி ஹீரோ அல்லது ராபின்ஹுட் கதாப்பாத்திரங்களில் நடிக்கலாம். இவரோட சாதுவான முகம் இவருக்கு பக்கபலம். நல்லவரா கெட்டவரான்னு கடைசி வரைக்கும் கண்டுபிடிக்க முடியாத ஒரு நவீன வேலு நாயக்கர்.
கோஹ்லி:
காட்டுத் தனமான வில்லன் ரோல் செய்யலாம். அடுத்த பிரகாஷ் ராஜ்னு பேர் எடுக்க நல்ல சான்ஸ் இருக்கு. அஞ்சு ரன் அடிச்சாலும் அம்பது ரன் அடிச்சாலும் எல்லாத்துக்கும் ஒரே ஆக்டிங் தான் - ஓவர் ஆக்டிங்.
சுரேஷ் ராயினா:
பட்ஜெட் தயாரிப்பாளர்களின் சூப்பர் ஸ்டாரா ஆகறதுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. எளிமையான தோற்றம், திறமை எல்லாம் ஒருங்கே அமையப் பெற்றவர். தனுஷ், கார்த்தி மாதிரி தனக்குன்னு ஒரு டிரென்ட் போட்டுக்கொள்ளும் சாமர்த்தியம் இவருக்கு இருக்கு.
சகீர் கான்:
இவரும் ஒரு பிரமாதமான வில்லனா வருவார். முதல்ல இவர் அடிச்சு நொறுக்குவார். அப்புறம் எல்லாரும் இவரை அடிப்பாங்க. இவரோட உயரம் இவருக்கு ப்ளஸ் பாயிண்ட். தமிழ், தெலுங்கு, மலையாளம்னு எல்லா மொழிகளிலும் ஒரு ரவுண்டு வரலாம்.
ஸ்ரீசாந்த்:
அடுத்த சிம்பு இவர் தான். பேச்சாகட்டும், செயலாகட்டும் - அப்படியே டிட்டோ. ஒரே ஒரு பிரச்சினை, இவர் அடிச்சா எதிரிங்க தாங்க மாட்டாங்க, பதிலுக்கு திருப்பி அடிச்சு இவரை நாலு நாள் தூங்க முடியாத படிக்கு டேமேஜ் பண்ணிட்டுப் போயிடுவாங்க.
அஷ்வின்:
சினிமாவில சான்ஸ் இல்ல. சீரியல்களில் ஹீரோவா வரலாம். ஏன்னா சீரியல்களில் ஹீரோக்கள் தான் எதிர்பாராத திருப்பங்களை உண்டு பண்ணுவாங்க (ஆனா ஹீரோயின் அதையெல்லாம் ரொம்ப ஈசியா சமாளிச்சுடுவாங்க, அது வேற விஷயம்).
தோனி:
சூர்யா, விஜய், அஜித்துக்கு அடுத்தபடியா கமெர்ஷியல் மாஸ் ஹீரோன்னா இவராத்தான் இருப்பாரு. எவ்வளவு திருட்டுத்தனம் செஞ்சாலும் அதெல்லாம் வெளிய தெரியாத அளவுக்கு ரொம்ப டாலென்டா ஹாண்டில் பண்றதுல கில்லாடி. கிரௌன்ட்ல முதல்ல அமைதியா இருக்கறது, அப்புறம் திடீர்னு ரைஸ் ஆகறது, தொடர்ந்து தோத்தாலும் சிரிச்ச மேனிக்கு பேட்டி குடுக்கறதுன்னு ஒரு பன்முகக் கலைஞரா மாறிட்டு வர்றார். கமல், அல் பாசினோ மாதிரி பெரிய ஆளுங்கல்லாம் இவர் கிட்ட நடிப்பு கத்துக்கணும்னு ஆஸ்திரேலியா போயிருக்கறதா ஒரு செய்தி. கலைச்சேவை, சமூக சேவைன்னு ரூட் பிடிச்சி ஆட்சியைப் பிடிச்சாலும் ஆச்சர்யப் படாதீங்க.
இர்பான் பதான் / யூசுப் பதான்:
கவுண்டமணி செந்திலுக்குப் பிறகு இவங்க தான் சிறந்த காமெடி ஜோடியா இருப்பாங்க. அதாவது, இவங்களை வெச்சு அந்த அளவுக்கு காமெடி பண்ணிட்டாங்கன்னு சொல்ல வர்றேன்.
பிரவீன் குமார், வினய் குமார், சாஹா, உமேஷ் யாதவ், வருண் - மைண்ட்ல வெச்சிருக்கேன், தேவைப் படும்போது யூஸ் பண்ணிக்கறேன். இப்போதைக்கு அவ்ளோ தான் சொல்ல முடியும்.
கவாஸ்கர்:
கிரிக்கெட்டர்கள் சினிமாவுக்குப் போயிட்டா அப்புறம் ஆளில்லாத கிரௌன்ட்ல இவங்க யாருக்குக் கமெண்டரி சொல்லப் போறாங்க? உயர் போலீஸ் அதிகாரி, கல்லூரி முதல்வர் இந்த மாதிரி ரோல்கள் கிடைக்கும். "உன்னை மாதிரி இளைஞர்கள் தான் நம்ம டிபார்ட்மென்டுக்குத் தேவை" அப்படின்னு தமிழிலும் ஆங்கிலத்திலும் சொல்லி நம்ம மேஜர் இல்லாத குறையைப் போக்கிடுவாரு.
ரவி சாஸ்திரி:
அமெரிக்கக் கம்பெனியின் முதலாளி வேஷம் இவருக்குக் கிடைக்கும். அந்த அளவுக்கு பீட்டர் விடுவாரு. கடைசியில ஹீரோவுக்கு "கம்பெனியின் சிறந்த நிர்வாகி" அப்படின்னு விருது குடுத்துட்டுப் போயிடுவாரு.
ஹர்ஷா போக்ளே:
இவருக்கு சினிமாவுல வாய்ப்பு கம்மி. ஆனா வாயுள்ள புள்ள - நீயா நானா மாதிரி எதாச்சும் டாக் ஷோ நடத்தி பொழைச்சுக்குவாரு.
பிசிசிஐ அதிகாரிகள்:
டிவி சீரியல்களில் நல்ல சான்ஸ் இருக்கு. நிரந்தர வில்லன்கள். அடுத்தவர்களைக் கொடுமைப் படுத்தி சந்தோஷப்படுவதில் கை தேர்ந்தவர்கள்.
பெயர் விட்டுப்போன வீரர்கள் தயவு செய்து எங்க மேல கோபப்பட வேண்டாம். ஏன்னா உங்களுக்கு நிகழ்காலமே பெரிய போர்க்களமா இருக்கு.
Jayaraman
New Delhi
Subscribe to:
Post Comments (Atom)
Super!!!! Almost all the comparison are perfect
ReplyDeletethanks
ReplyDelete